13 செட் நியமனப் பாரங்கள் விற்பனையாகியுள்ளன

செமினி இடைத்தேர்தல் | நாளை, செமினி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கலை முன்னிட்டு, இதுவரை, 13 நியமனப் பாரங்கள் விற்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையத்தின் (இசி) தலைவர் அஸார் அஸிசான் ஹருண் தெரிவித்துள்ளார்.

பாரிசான் நேசனல் (பிஎன்) பிரதிநிதி ஐந்து பாரங்களையும், பக்காத்தான் ஹராப்பான் மூன்று பாரங்களையும், மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) ஒரு பாரத்தையும் வாங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்று, டேவான் ஶ்ரீ செம்பாக்கா, காஜாங் நகராட்சி மன்றத்தில், செமினி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேலும், 4 பாரங்களைச் சுயேட்சை வேட்பாளர்கள் வாங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

செமினி இடைத்தேர்தலில், தளவாடங்கள், வசதிகள், பாதுகாப்பு போன்ற அனைத்து அம்சங்களின் ஏற்பாடுகளும் சுமூகமாக நடக்க, 992 இசி அதிகாரிகள் பணியில் இருப்பார்கள் என்றும் அவர் சொன்னார்.

“நாளை வேட்புமனு தாக்கல் சுமூகமாக நடைபெற, அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் ஆதரவாளார்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

-பெர்னாமா