“நமக்கு அதிகச் செலவு பிடிக்கும் அந்நிய ஆலோசகர்கள் தேவை இல்லை”

மித மிஞ்சிப் பெருத்து விட்ட நாட்டின் வரவு செலவுத் திட்டத்தைக் குறைப்பதற்கு உதவித் தொகைக் குறைக்கப்படுவது உதவும் எனச் சொல்வதற்கு நமக்கு அதிகச் செலவு பிடிக்கும் அந்நிய ஆலோசகர்கள் தேவை இல்லை.

இவ்வாறு  பாஸ் கட்சி, பொருளாதாரத் திட்டப் பிரிவுக்குப் பொறுப்பான அமைச்சர் நோர் முகமட் யாக்கோப்பிடம் கூறியுள்ளது.

“சாதாரண கெமாஸ் (சமூக மேம்பாட்டு நிறுவனம்) ஆசிரியர் கூட அதனைச் சொல்ல முடியும்”, விலை ஏற்றத்தை ஆட்சேபிக்கும் மன்றத்தின் தலைவருமான பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் கூறியுள்ளார்.

அரசாங்கம் தான் திட்டமிட்டுள்ள உதவித் தொகைக் குறைப்புக்களை நிறுத்திக் கொண்டு அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்க முயல வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

எளிதான வழிகளைப் பின்பற்றுவதற்குப் பதில் அரசாங்கம் பொருளாதாரத்தையும் நிதிகளையும் நல்ல முறையில் நிர்வகிக்க வேண்டும். நீண்ட காலமாக நடப்பில் இருக்கும் ஏகபோக உரிமைகளை உடைக்க வேண்டும், உலக அளவில் விலைகள் உயர்ந்த போதிலும் உதவித் தொகைகளை நிலை நிறுத்த முயல வேண்டும் என்றும் அந்த பாஸ் உதவித் தலைவர் வாதாடினார்.

பொருள் விலைகள் அனைத்துலக திறந்த சந்தை முறைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் கூட்டரசு அரசாங்கம் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் வலிமையைப் பெற்றிருக்கவில்லை என்று நேற்றி நோர் முகமட் கூறியிருப்பது பற்றி மாஹ்புஸ் கருத்துரைத்தார்.

“பொருளாதாரத் திட்டப் பிரிவுக்கு பொறுப்பான அமைச்சர் அந்த அறிக்கையை விடுத்திருப்பது கண்டு மன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அந்த ஓர் அம்சம் மட்டும்தானா விலைகளை நிர்ணயம் செய்கின்றது?”, என அவர் வினவினார்.

“கங்கோங் கீரை விலை உயர்வுக்கு இஞ்சி விலை உயர்வுக்கும் திறந்த உலகச் சந்தை முறைதான் காரணமா?”

“பொருளாதார நிதிக் கொள்கைகளில் பலவீனங்கள்”

முறையான பொருளாதாரத் திட்டங்களின் மூலம் நல்ல நிதிக் கொள்கைகள் வழியும் அரசாங்கம் உதவித் தொகைகளைக் குறைக்காமல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என மாஹ்புஸ் கருதுகிறார்.

“சீனி, அரிசி போன்ற அவசியமான பொருட்களுக்கு நீண்ட காலமாக நடப்பில் இருக்கும் ஏகபோக உரிமைகள், ஆளுமையில் காணப்படும் கசிவுகள் ஆகியவையே விலை ஏற்றத்துக்கு முக்கியக் காரணங்களாகும்.”

“போட்டி இல்லாததால் விலைகள் உயருகின்றன. கசிவுகளினால் அரசாங்கம் உதவித் தொகைகளை நிலைநிறுத்த முடியாமல் தடுமாறுகிறது.”

பொருளாதார நிதிக் கொள்கைகளில் காணப்படும் பலவீனங்களே உண்மையான பிரச்னைகள்,” எனத் தெரிவித்த அவர், பணத்தை மிச்சப்படுத்தும் திறந்த டெண்டர் முறைக்குப் பதில் “தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு” நேரடிப் பேச்சுக்கள் மூலம் குத்தகைகள் கொடுக்கப்படுவது பெரும் செலவைக் கொண்டு வருவதை மாஹ்புஸ் சுட்டிக் காட்டினார்.