அமைச்சர் : பாக்சைட் சுரங்க நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுமதியைத் தொடரலாம்

எதிர்வரும் மார்ச் 31-ம் தேதியோடு நிறைவடைய உள்ள, பஹாங், பாக்சைட் சுரங்க நடவடிக்கைகள் மற்றும் பாக்சைட் ஏற்றுமதி தடையுத்தரவை, மீண்டும் தொடரப் போவதில்லை என நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இன்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பாக்சைட் தாது உப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மீண்டும் தொடரும், ஆனால், அது புதிய தரநிலை இயக்க நடைமுறை (எஸ்.ஓ.பி.) மற்றும் கடுமையான சட்ட அமலாக்கங்களுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தப்படும்.

“மார்ச் 31-க்குப் பிறகு, தடையுத்தரவைத் தொடரப் போவதில்லை….. பஹாங் பாக்சைட் தொழிற்துறைக்கு உண்மையில் அதிக கோரிக்கை உள்ளது, மாநில அரசுக்கும் அதிக இலாபங்களை அது ஈட்டித் தந்துள்ளதை நான் காண்கிறேன்.

“2015-ஆம் ஆண்டில் மட்டும், மாநில அரசுக்கு RM47 மில்லியன் இலாபம் (ராயல்டி) பதிவாகியுள்ளது. மத்திய அரசாங்கத்திற்கு இதில் எந்தவொரு பங்கும் இல்லை, இறக்குமதி உரிமத்திற்கு (ஏபி) அனுமதி வழங்கியதோடு சரி.

“உள்ளூர் அரசியல் தலைவர்கள் மற்றும் மாநில அரசாங்கம் உள்ளிட்ட அனைவரிடமும் நாம் கலந்துபேசிவிட்டோம், யாரும் இதனை எதிர்க்கவில்லை. மாறாக, இந்தப் பாக்சைட் தொழிற்துறைக்குப் பெரும் வரவேற்பு இருக்கிறது, அதனைத் தொடர வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர்,” என்றார் அவர்.

இன்று, பாக்சைட் சேமிப்பு பகுதி மற்றும் குவாந்தான் துறைமுகத்தைப் பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் டாக்டர் சேவியர் பேசினார்.

அதேசமயம், தற்போது குவாந்தான் மற்றும் கெமாமான் துறைமுகங்களின் சேமிப்புப் பகுதியில் இருக்கும், 435,000 டன் பாக்சைட்டை, மார்ச் 31-ம் தேதிக்குள் அங்கிருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் சொன்னார்.

காரணம், புதிய எஸ்.ஓ.பி. விதிகளின் படி, சுத்தம் செய்யப்பட்ட பாக்சைட் மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டது, இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வழி என்றும் அவர் கூறினார்.

“சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒத்துழைப்புடன், அமைச்சு புதிய எஸ்.ஓ.பி. ஒன்றை அமைத்துள்ளது. அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும், குறிப்பாக, சுரங்கத் தொழிலாளர்களின் ஒத்துழைப்பை நான் மிகவும் எதிர்பார்க்கிறேன், எங்கள் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் இணங்கி நடக்க வேண்டும்.

“1974 சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின்படி, சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபடும், தொழில்துறை நிறுவனங்களுக்கு RM500,000 அபராதம் மற்றும் மூன்று மாதச் சிறைதண்டனை விதிக்கப்படலாம்.

“இந்த எஸ்.ஓ.பி. பிரச்சினைகள் இல்லாமல் செயல்படுத்தப்பட்டால், பாக்சைட் உள்ள திரெங்கானு மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களுக்கும் அதன் செயல்பாட்டை விரிவுபடுத்துவோம். இதுவரை திரெங்கானு இதில் (பாக்சைட் ஏற்றுமதி) ஆர்வம் காட்டியுள்ளது, ஆனால் அமைச்சு, மாநில அரசுடன் விவாதித்த பின்னரே அதனை செயல்படுத்தும்,” என்று அவர் கூறினார்.

கனிம வளங்களின் தேவை, சந்தையில் அதிகரித்து வருவதால், அவை இருக்கும் இடங்களை ஆய்வு செய்ய அமைச்சரவை, தனது அமைச்சை கேட்டுள்ளதாகவும் சேவியர் சொன்னார்.

-பெர்னாமா