அவரை 90 எம்.எல் எடுக்கிற நிலைக்குத் தள்ளியது இவர்கள்தான்… இயக்குனர் சேரன் ஆவேசம்

சேரனின் இயக்கத்தில் திருமணம் என்ற படம் மார்ச் 1 ல் ரிலீஸ் ஆனது. கூடவே தடம், 90 எம்.எல் போன்றப் படங்களும் வெளியாகின. 90 எம்.எல் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானதிலிருந்தே சர்சைகளில் சிக்கியுள்ளது. மாதர் சங்கங்கள் மற்றும் பல கலாச்சார அமைப்புகளின் எதிர்ப்பை சம்பாதிதுள்ள அப்படத்தைப் பற்றி இயக்குனர் சேரன் கூறிய கருத்துக்களின் தொகுப்பு.

இது ஒரு வியாபார உலகம். எல்லோரும் எதையாவது செய்து பணம் சம்பாதிக்கணும் அப்படிங்குற முடிவுக்கு வந்துட்டாங்க. இப்போ 90 எம்.எல் படம் எடுத்த இயக்குனர் இதற்குமுன் ‘குளிர் 100 டிகிரி’போன்ற நல்ல படங்களை எடுத்திருக்கிறார். அவரை 90 எம்.எல் எடுக்கிற நிலைக்கு இந்த திரையுலகம் கொண்டுவந்துள்ளது. நல்ல படம் எடுக்கும்போது யாரும் அதைப் பற்றி பேசவில்லையே. 90 எம்.எல் மாதிரியானப் படம் எடுக்கும்போதுதானே அவர் பேசப்படுகிறார். அவருக்கு அந்த சர்சையால் ஏற்படுகிற பிரபலம் தேவைப்படுகிறது. தார்மீகம் என்னவென்றால் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் பெண்களுக்கும் ஒரு கலாச்சாரம் இருக்கிறது அதை சீரழிக்கிற மாதிரியான திரைப்படங்களை உருவாக்கியிருக்கவேண்டாம் என்பது எனது கருத்து. ஆனால், அது அவர்களின் விருப்பம்,  நான் இப்படித்தான் டிரெஸ் பண்ணுவேன் என்பவர்களுக்கு நீங்கள்போய் கட்டிவிட முடியாது. முடிந்த அளவுக்கு ஆபாசமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம் ஒழிய அரைகுறை ஆடையில் தான் வருவேன் என்பவர்களை என்ன சொல்லமுடியும். ஆக்‌ஷன் படமாக ‘தடம்’வெளியாகியிருக்கு, குடும்ப படமாக திருமணம் வெளியாகியிருக்கு, கூடவே 90 எம்.எல் படமும் வந்திருக்கு. மக்கள் எந்தப் படத்தை பார்க்கவேண்டும் என்பது அவர்களின் விருப்பம்.  ஆனாலும், என்னைப் பொருத்தவரையில் 90 எம்.எல் என்பது பெண்களை இழிவாக சித்தரிக்கும் படம். அவர்கள் காட்டுகிறதுபோல் தமிழ்நாட்டுப் பெண்கள் இல்லை. தமிழில், தமிழ்நாட்டில் நடப்பதுபோல் படம் எடுத்து, அதில் தமிழ் பெண்கள் இப்படித்தான் என சொல்லும்போது என் வீட்டுப் பெண்களும் அதில் சம்மந்தப்படுகிறார்கள் இல்லையா? மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல வெளிநாடுகளில் இந்தப் படத்தை வெளியிட தடை விதித்துவிட்டார்கள். நமது அரசாங்கம் இதை எப்படி அனுமதித்தது என்றுத் தெரியவில்லை.

இதற்கு மக்களும் தான் காரணம். இந்த மக்களொன்றும் குற்றமற்றவர்கள் இல்லை. இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மாஹா தேவகி போன்ற படங்கள் ஏன் நல்லா ஓடுச்சு?  மக்கள் அந்தப் படங்களை பார்க்கிறார்கள், அதை வெற்றியடைய வைக்கிறார்கள். அதில் தொடங்கியதுதான் 90 எம்.எல் படம் வரை வந்திருக்கு. எனவே தியேட்டர் ஓனர்கள் 90 எம்.எல் மாதிரியானப் படத்திற்குதான் மக்கள் வருகிறார்கள் என முடிவு செய்கிறார்கள். அதைப் பயன்படுத்தி சம்பாதிக்கலாம்னு நினைக்குறாங்க. அதனால், தடம் படத்திற்கு 2 காட்சிக் கொடுக்கிறார்கள், திருமணத்திற்கு 2 காட்சி கொடுக்கிறார்கள், 90 எம்.எல் க்கு 4 காட்சிகள் கொடுக்கிறார்கள், 5 மணிக்காட்சிக் கூட திரையிடுகிறார்கள். அவர்கள் வியாபாரிகள் தானே. பணம் சம்பாதிக்கத் தானே அவர்கள் தியேட்டர் நடத்துறாங்க. ஆனால், இந்தப் படம் ரிலீஸ் ஆகிறதெனத் தெரிஞ்சதும் ஓடிப்போய் டிக்கெட் புக் பண்ணுனது யாரு? 90 எம்.எல் படத்தின் 5 மணி காட்சிக்கே முன்னடிப் போய் நிக்கிறது யாரு? தியேட்டர் உரிமையாளர் மீதோ, படத்தை எடுத்தவர்மீதோ குற்றம் சொல்வதற்கு முன்பு, அந்தப் படத்தைப் பார்க்க தயாராக இருக்கிற மக்கள் தான் முதல் குற்றவாளி. இது கலாச்சாரத்தை சீரழிக்கிறப் படம், இது எங்களுக்கு வேண்டாம், நாங்கள் பார்க்கமாட்டோம்னு மக்கள் சொன்னால் அவர்கள் ஏன் இந்தமாதிரிப் படங்களை எடுக்கப்போகிறார்கள்? என்று இயக்குனர் சேரன் கூறியுள்ளார்.

-nakkheeran.in