தேமுதிகவுக்கு சரியான பாடம் கற்றுகொடுத்த ஸ்டாலின்.. வரைமுறையில்லாமல் போன பேர அரசியலுக்கு சுளீர் அடி!

சென்னை: ஒரு சரியான முடிவை எடுத்து இருக்கிறார் திமுக தலைவர் முக ஸ்டாலின். தேமுதிகவுக்கு இடமே இல்லை என்று கறாராக சொல்லி உள்ளார்!!

நேற்று ஒரே நாளில் தமிழக அரசியலையே பரபரப்பாக்கி விட்டது தேமுதிக. கூடவே அதிமுக, திமுக என இரு தரப்பும் மாறி மாறி பேசி எல்லோர் முன்னிலையிலும் அசிங்கப்பட்டுவிட்டது.

நேற்று துரைமுருகன் பேட்டியில் ஒரு வார்த்தை சொல்லி இருந்தார். எங்ககிட்ட சீட் எதுவும் இல்லையே, திமுக தலைவர்தான் இதுகுறித்து முடிவு எடுக்கணும்” என்றார். இதனால் தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் இடம் கிடைக்குமோ என்ற பேச்சும் லைட்டாக எழுந்தது.

பேராசை

அப்படி கூட்டணியில் சேர்த்து கொண்டால், சீட் எப்படி, யாரிடமிருந்து பெற்று தருவது என்றெல்லாம் விவாதம் எழுந்தது. அது மட்டுமல்லாமல் ஏற்கனவே விஜயகாந்த் வீடு தேடி சென்றவர் ஸ்டாலின். பாமகவைதான் விட்டு விட்டோம், தேமுதிக கூட இருந்தால் ஓட்டுக்களை பிரிக்க உதவும் என்பதற்காக கூட்டணிக்கும் தயாரானார். ஆனால் தேமுதிக பேராசையால் அதுமுடியாமல் போய்விட்டது.

உற்றுநோக்கியது

எனினும் தேமுதிக இப்போது இவர்களை தேடியே வந்துவிட்டதால் துரைமுருகன் சொன்னதைபோல் ஸ்டாலின் ஏதாவது முடிவெடுப்பாரா என்று உற்றுநோக்கப்பட்டது. அதன்படியே இது சம்பந்தமாக ஆலோசனை கூட்டமும் நடத்தியது. ஆனால் தேமுதிக கூட்டணியில் இல்லை என்று தெளிவுபடுத்திவிட்டார் ஸ்டாலின்.

மலிவு அரசியல்

இதன்மூலம் மலிவு அரசியலை திமுக நடத்தவில்லை என்பது தெளிவாக்கி உள்ளது. தேமுதிக மூலம் கிடைக்கும் 2% ஓட்டுக்களையாவது வாங்கிவிட வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

பொதுமக்கள்

ஒருவேளை தேமுதிகவுடன் கூட்டணி அமைத்திருந்தால், அதற்கு சந்தர்ப்பவாத கூட்டணி என்ற முத்திரையை மக்கள் வெகு எளிதாக குத்திவிடுவார்கள் என்பதும் ஸ்டாலின் நன்றாகவே உணர்ந்திருக்கிறார். அது மட்டுமல்ல, இப்போது வரை ஒரு முடிவுகூட எடுக்க தெரியாமல், தங்களது பலத்தையும் முழுசாக அறியாத, ஒரு கட்சியை கூட்டணியில் இணைத்து கொண்டால், பொதுமக்களின் அதிருப்தியை தான் சம்பாதித்திருக்க கூடும்.

tamil.oneindia.com

TAGS: