மும்பைத் தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீதின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா! : தீவிரவாதப் பட்டியலில் நீடிப்பு

பாகிஸ்தானின் ஜமாத் உத் தாவா JuD தீவிரவாத அமைப்பின் தலைவனும் மும்பைத் தாக்குதலின் சூத்திரதாரியுமான ஹபீஸ் சயீது, ஐ.நா தீவிரவாதப் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்குமாறு விடுத்த கோரிக்கையினை ஐ.நா பாதுகாப்புச் சபை நிராகரித்துள்ளது.

ஹபீஸ் சயீதை இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற முக்கிய சர்வதேச நாடுகளும் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான புதிய அரசு அங்கு புதிய பாகிஸ்தான் என்ற பெயரில் சர்வதேசத்தால் தடை செய்யப் பட்டுள்ள அனைத்து தீவிரவாத அமைப்புக்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் போதும் ஹபீஸ் சயீதின் விண்ணப்பத்தை எதிர்க்கவில்லை. இந்நிலையில் பாகிஸ்தானில் வீட்டுக் காவலில் உள்ள ஹபீஸ் சயீதை விசாரிக்க பாகிஸ்தானுக்கு வரவிருந்த ஐ.நா அதிகாரிகளுக்கு நியூயோர்க்கில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் விசா மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புல்வாமா தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு அதிரடியாகச் செயற்பட்டு அங்கு அரசின் ஆதரவின்றி இயங்கி வரும் 182 மதப் பள்ளிகளைக் கையகப் படுத்தி 121 பேரைக் கைதும் செய்துள்ளது. இத்தகவலை பாகிஸ்தானின் உள்துறை அமைச்சு உறுதிப் படுத்தியுள்ளது.

-4tamilmedia.com