இந்தியா மீதும் வர்த்தகப் போர்! : அமெரிக்கப் பொருட்களுக்கு வரியை அதிகரிக்க இந்தியா முடிவு!

அண்மையில் இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமைத் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்குக் காரணமாக அமெரிக்காவுக்குச் சாதகமான வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ள தொடர்ந்து இந்தியா மறுத்து வருவதைத் தெரிவித்திருந்தது.

இதையடுத்து நியூடெல்லியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இந்திய வர்த்தகச் செயலர் அனூப் வதாவன் அமெரிக்காவின் இம்முடிவால் இந்தியாவுக்குப் பெரிய அளவு பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை என்றார்.

சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் சுமார் ரூ 1530 கோடி இழப்பு தான் ஏற்படும் என்றும் கூறினார். ஏற்கனவே டிரம்பின் வேண்டுகோள்களுக்கு அமைய அமெரிக்கப் பொருட்கள் சிலவற்றுக்கான வரியை இந்தியா குறைத்தது என்றும் இதில் அவர் திருப்தியடையாது போனதால் தான் இந்தியாவுக்கான பொது முன்னுரிமையை ரத்து செய்துள்ளார் என்றும் அனூப் வதாவன் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தியாவை வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து விலக்கியதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதற்குப் பதிலடியாக அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது. மேலும் அமெரிக்காவின் முடிவு தவறானது என உலக வர்த்தக அமைப்பான WTO இடமும் முறையிட இந்தியா முடிவெடுத்துள்ளது. மேலும் அமெரிக்க முடிவுக்குப் பதிலடியாக அதன் இறக்குமதிப் பொருட்கள் மீது வரியை அதிகரித்தால் சுமார் 74 000 கோடி ரூபாய் வரை அமெரிக்காவுக்கு இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது ஏப்பிரல் முதலாம் திகதிக்குள் வரிவிதிப்பு தொடர்பில் ஓர் இணக்கப் பாட்டுக்கு வர இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

-4tamilmedia.com