இலங்கையில் பதில் கிடைக்காத ஹர்த்தாலுக்கு சர்வதேசம் பதில் சொல்ல வேண்டும்

அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும் என்பது பழமொழியோ, சான்றோர் வாக்கோ, எப்படி இருந்த போதிலும், இப்போது செயற்பாட்டுப் பயனில் இருக்கிறதா என்றால், ‘இல்லை’ என்றே பதில் சொல்லியாக வேண்டும்.

அப்படியானால், இலங்கையில் இனப்பிரச்சினை எனும் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டிருக்க வேண்டும்; காணாமல் போனோர் பிரச்சினை முடிவுக்கு வந்து, மகிழ்ச்சி பொங்கியிருக்க வேண்டுமே?
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 40ஆவது கூட்டத்தொடர், கடந்த மாத இறுதியில் ஆரம்பமானது.

இதன் ஆரம்பமே, இலங்கையிலிருந்து எழுந்த ஜனநாயக எதிர்ப்புகள் எனும் பெரும் அழுத்தத்துடனேயே நிகழ்ந்தது. மக்கள் தங்களுடைய எதிர்ப்புகளை, ஜனநாயக முறைமையின்கீழ் வெளிப்படுத்தவே முடியும் என்பதற்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில், வடக்கில் நடத்தப்பட்ட முழுக் கடையடைப்பு, கிளிநொச்சியில் நடைபெற்ற எதிர்ப்புக் போராட்டம் ஆகியவை நல்லதோர் உதாரணங்களாகும்.

அதன் தொடர்ச்சியாக, சர்வதேச மனித உரிமைப் பேரவையில், காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான நியாயமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வைப் பெறக் கூடிய வகையில் அமைய வேண்டும் என்ற சாராம்சத்துடன், ஐ.நா மனித உரிமை சபைக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான ஆராய்வுகள், இம்மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ளன.

இதன் போது, இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது மற்றும் சர்வதேசத்தின் நேரடித் தலையீட்டையும் கோரி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) பூரண ஹர்த்தாலுக்கும் கவனயீர்ப்புப் பேரணிக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன்  சர்வதேசத்துக்கான அழுத்தம் வழங்கும் இந்த வேலைத்திட்டம் நடைபெறவுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற யுத்தம், ‘மனிதாபிமானத்துக்கான யுத்தம்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட, பெரும் யுத்தத்தாலும், அது நிறைவு பெற்ற பின்னர், இடம்பெற்ற கைதுகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், நிலஆக்கிரமிப்பு , அரசியல் கைதிகள் விவகாரம், ஊடகவியலாளர் தாக்கப்படுதல் அடங்கிய பல்வேறு குற்றங்கள், இனப்படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே, இப்போது தமிழ் மக்களின் அங்கலாய்ப்பாக இருக்கிறது.

யுத்த நிறைவுக்குப் பின்னரும் அதன்போதும் நடைபெற்ற குற்றங்களுக்கு, நீதி வேண்டி ஐ.நா சபையில் முன்வைக்கப்படுகின்ற பிரேரணைகள் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டும், கால அவகாசம் கோரப்பட்டும், காலங்கடத்தியும் எனத் தாமதிக்கப்படுவதாகவே இருந்து வருகிறது.

2017ஆம் ஆண்டில் பிரேரணைகளின் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் அனுசரணை செய்து, கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றைச் சீர்செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஆனால் அரசாங்கம், குற்றச் செயல்களுக்குத் தீர்வுகளானவை, ‘மறத்தல் மன்னித்தல்’ என்று கூறுவதுடன், ‘கண்துடைப்பு’ நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றது. 2017இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக, ஆணைக்குழுக்களை நிறுவி, சர்வதேசத்திடமிருந்து தப்பிப் பிழைக்கும் யுத்தியை அரசாங்கம் மேற்கொண்டது.

ஆனால், அவற்றில் ஒப்புக்கொள்ளப்பட்டவைகள் எவையும் இன்னமும் நிறைவு செய்யப்படவில்லை. நாட்டில் நல்லிணக்கம் என்ற போர்வையில், பல்வேறு திரைமறைவு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றது எனப் பல தரப்பினராலும் குற்றஞ் சுமத்தப்படுகிறது.

ஆயுத மோதல், அது நடைபெறும் காலத்தில் நடைபெறுகின்ற குற்றங்களுக்குத் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், அவற்றுக்கு மன்னிப்பு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் மேலெழுந்து வருகின்றன.

பல நாடுகளில் நடைபெற்ற ஆயுத மோதல்களுக்குப் பின்னர், மோதல்களில் ஈடுபட்ட தரப்பினருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என, ஜெனீவா சமவாயம் சொல்கிறது. அவ்வாறு மன்னிப்பு வழங்குகின்ற போது, மனிதாபிமான வழக்காற்றுச் சட்டத்தின் ஒழுங்கு விதிகளுடன் இணைத்தே பார்க்கப்படவேண்டும் என்பது விதியாகும்.

இந்த விதி, போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்துக்கெதிரான குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது என்கிறது. இதிலுள்ள சிக்கல், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் யாதென எவ்வித சமவாயங்களும் தெளிவாக வரையறுக்கவில்லை.

காணாமல்போகச் செய்தல், சித்திரவதை, பாலியல் குற்றங்கள், இன அழிப்பு என்பன மனிதாபிமானத்துக்கெதிரான குற்றங்கள் என பொதுவில் வரையறுக்கப்பட்டுள்ளன.  இந்த அடிப்படையில்தான் 70களுக்குப் பின்னரான காலத்தில், ஆரம்பமான தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எனும் இலங்கையின் இனப்பிரச்சினை சார் யுத்தமானது, 2009இல் நிறைவு பெற்றது. இக் காலகட்டத்தில் மனிதாபிமானத்துக்கெதிரான குற்றங்கள் இலங்கையில் நடைபெற்றமைக்கான சான்றுகள் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவற்றால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் இக்காலகட்டத்தில், இலங்கைத் தமிழ் மக்கள் சார்ந்த விடயங்கள் தொடர்பில், சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்; மீண்டும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என்ற கோரிக்கைகள் பல தரப்பினராலும் விடுக்கப்பட்ட வண்ணமிருக்கிறது.

ஆனால், கால அவகாசம் கோரும் இலங்கை அரசாங்கத்துக்கு மறுப்புத் தெரிப்பதுடன் நின்றுவிட முடியுமா? என்ற கேள்விகளும் இருக்கத்தான் செய்கின்றன.

2019 மார்ச் 20ஆம் திகதியன்று, இலங்கையின் மனித உரிமை விடயம் தொடர்பாக ஆராயப்படவுள்ளது. சர்வதேசத்தின் நேரடித்தலையீட்டுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு பொறியாக, வடக்கு, கிழக்கில் நடைபெறும் போராட்டங்கள், கவனயீர்ப்புப் பேரணிகள் அமையவேண்டும்; அமையும் என்ற எதிர்பார்ப்புடனேயே 19ஆம் திகதி, காலை மட்டக்களப்பு, கல்லடிப்பாலத்திலிருந்து காந்தி பூங்காவரை கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் ஹர்த்தால், பேரணிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் (வந்தாறுமூலை, தென் கிழக்கு, திருகோணமலை வளாகம்), விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், தொழில் நுட்ப கல்லூரி, பாடசாலை மாணவர்கள், தமிழாசிரியர் சங்கத்தினர், அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம், அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சங்கங்கள், ஓட்டோ சங்கங்கள், ஊடக சங்கங்கள், சமயத் தலைவர்கள், இளைஞர் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், சகல கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், மகளிர் சங்கத்தினர், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரையும்  கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், வடக்கு, கிழக்கில் வர்த்தக சங்கத்தினர் தமது கடைகளை மூடியும் அரச,  தனியார் போக்குவரத்து சங்கத்தினர் தமது போக்குவரத்துச் சேவைகளை நிறுத்தியும் அனைத்துத் தரப்பினரும் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தம்மை ஒறுத்து, தம்முடைய இனத்துக்கான உணர்வு பூர்வமாக போராட்டம் நடத்துகின்ற மக்கள் கூட்டம், கால ஓட்டத்தின் வரலாற்றில், அழிந்து போய்விடுவதில்லை என்பது யதார்த்தம்.

யுத்தகுற்றம் தொடர்பாக, படையினரை விசாரணை செய்வதற்கு அனுமதிக்கமாட்டேன் என்று கூறுகின்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சர்வதேச விசாரணைகளுக்கான ஒத்துழைப்பை வழங்குவாரா என்ற கேள்வி இருந்தாலும், அரசாங்கம் மீண்டும் ஐக்கிய நாடுகள் சபையில் கால அவகாசம் கேட்பதானது சாத்தியப்படுமா என்பது ஒற்றைக்காலில் தவமிருக்கும் கொக்கின் நிலையாகத்தான் காணப்படுகின்றது.

இறுதி யுத்தத்தின் நடந்த குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் திருப்தியாக அமையவில்லை எனப் பல வெளிப்பாடுகள் வந்திருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காலத்தில் மட்டுமல்ல, இன்று வரை விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பட்டியல் வெளியிடப்படவில்லை; மரணச்சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.

‘மறப்போம் மன்னிப்போம்’ என்று கூறப்படுகின்ற வேளையில், காணாமல் போனவர்கள் எல்லோரும் வெளிநாடுகளில் தஞ்சம் கோரி வசித்து வருகிறார்கள் என்று தகவல் வெளியிடுவதும் நடைபெறுகின்ற நாட்டில், கடையடைப்பு, ஹர்த்தால்கள் வெற்றியளிக்காவிட்டாலும் சர்வதேசத்தில் பார்வையில் எடுபட வேண்டும். ஒற்றைக்கால் கொக்கின் நிலையில் மாற்றம் ஏற்படவும் வேண்டும்.

19ஆம் திகதி நடைபெறும் காணாமல் போனோரது குடும்ப உறவினர்களின் அழைப்பிலான ஹர்த்தாலுக்கும் பேரணிக்கும் சர்வதேசம் பதில் சொல்ல வேண்டும்.

(அதிரதன்)

-tamilmirror.lk

TAGS: