ஹரப்பானில் உள்ள ‘கோமாளிகளைக் களையெடுப்பீர்’ -காடிர்

பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவுபெறவிருக்கும் வேளையில். கட்சியில் “கோமாளித்தனம் செய்வோரையும்   கூத்தடிப்பவர்களையும்  களையெடுப்பது” அக்கட்சிக்கு நன்மையாக அமையும் என்கிறார் மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின்.

ஹரப்பான் கூட்டணிமீது மக்களின் நம்பிக்கை குறைந்து வருவதைத் தடுக்க அது அவசியம் என்றாரவர். கேமரன் மலை, செமிஞ்யே தேர்தல் தோல்விகள் மக்கள் நம்பிக்கை சரிந்து வருவதைக் காண்பிக்கின்றன என்று காடிர் அவரது வலைப்பதிவில் கூறினார்.

“ஓராண்டு நிறைவு நெருங்கிவரும் வேளையில் ஹரப்பானை மக்கள் மேலும் நுணுகி ஆராயத் தொடங்குவார்கள்.

மக்களின் நம்பிக்கையைப் பெற அது தன்னைத் தானே மாற்றிக்கொள்ளவும் வேண்டாதவர்களைத் தூக்கி எறியவும் தயாராக இருக்க வேண்டும் என்றாரவர்.

அமைச்சர்களும், மந்திரி புசார்களும் முதலமைச்சர்களும் தங்களைச் சுய-பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அரசாங்கம் “திறமையற்றது, ஆணவமிக்கது, மக்களைவிட்டுத் தள்ளி நிற்பது” என்று மக்கள் நினைத்தால் அதற்காக அவர்களைக் குறை சொல்லக்கூடாது”, என்றவர் குறிப்பிட்டார்.

“ஹரப்பான் கடுமையாகவும் விவேகமாகவும் பாடுபட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவுசெய்து இது ஒரே ஒரு முறை மட்டும் ஆட்சிக்கு வந்த அரசல்ல நிரந்தரமாக இருக்கப்போகும் அரசு என்பதை நிரூபிக்க வேண்டும்” என்றவர் வலியுறுத்தினார்.

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீதான வழக்குகள் விசயத்தில் தாமதப்படுத்துவது கண்டு மக்கள் பொறுமை இழந்து வருகிறார்கள்.

“நஜிப் தொடர்ந்து சட்டத்தைக் கேலி செய்ய இடமளித்துக் கொண்டிருந்தால் நீதி பணக்காரர்கள் பக்கம்தான் என்று மக்கள் எண்ணுவார்கள். இன்னும் மோசமாக, அவர் குற்றவாளி அல்ல என்றுகூட நினைக்கத் தொடங்கி விடுவார்கள்”, என காடிர் கூறினார்.