ரோமானியச் சட்டம் : திஎம்ஜே மக்கள் பிரதிநிதி அல்ல, டாக்டர் மகாதீர் கூறுகிறார்

ரோமானியச் சட்டம், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐசிசி) இணைய முடிவெடுத்ததன் தொடர்பில், மத்திய அரசாங்கம், மலாய் ஆட்சியாளர்களைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூறி, ஜொகூர் பட்டத்து இளவரசர், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் வெளியிட்ட அறிக்கைக்கு, எந்தவொரு ஒளிவுமறைவும் இன்றி, பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் இன்று கருத்து தெரிவித்தார்.

“அவர் ஒரு மக்கள் பிரதிநிதி அல்ல, அவர் அவருக்காகப் பேசுகிறார்,” என்று  கோலாலம்பூரில், 14-வது நாடாளுமன்றக் கூட்டத்தொடரின், இரண்டாம் பருவத் தொடக்க விழாவைத் தொடர்ந்து, டாக்டர் மகாதீர் நிருபர்களிடம் பேசினார்.

மலேசிய ஆட்சியாளர்களிடம் கலந்துபேசாமல் முடிவெடுத்தது, அச்சபையைப் புத்ராஜெயா மதிக்கவில்லை என்பதையேக் காட்டுகிறது என்று துங்கு இஸ்மாயில் நேற்று, தனது டுவிட்டர் செய்தியில் குற்றம் சாட்டியிருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, ரோமானியச் சட்டத்தில் இணைய, அரசாங்கம் எடுத்துள்ள முடிவு, மலாய் ஆட்சியாளர்கள் பொருத்தமற்றது, அதோடுமட்டுமின்றி, மலேசியாவில் அது மலாய் மற்றும் இஸ்லாமிய நிலைப்பாடுகளைப் பாதிக்கும் என்றும் துங்கு இஸ்மாயில் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று, விஸ்மா புத்ரா வெளியிட்ட ஓர் அறிக்கையில், பேரரசரின் நிலைப்பாட்டுக்கு அது அச்சுறுத்தலாக இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த டிசம்பர் 26, 2018-ல், நடப்பு பேரரசர் பொறுப்பில் இருந்த, சுல்தான் நஸ்ரின் ஷாவிடம், ரோமானியச் சட்டம் தொடர்பான கடிதம் ஒன்றை, விஸ்மா புத்ரா சமர்பித்துள்ளதாக டாக்டர் மகாதிர் கூறினார்.

ரோம் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஐசிசி, 2002-ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக அமலாக்கம் கண்டது.

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் குற்றவியல் ஊடுருவல் போன்ற கடுமையான சர்வதேசக் குற்றங்களில் சந்தேகிக்கப்படும் எந்தவொரு தனிநபரையும் விசாரணை செய்ய மற்றும் குற்றச்சாட்ட, ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான முதல் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இதுவாகும்.

2019, மார்ச் 4-ம் தேதி வரை, 124 நாடுகள் இதில் அங்கத்துவம் பெற்றுள்ளன.

பெல்ஜியம், கம்போடியா, டென்மார்க், ஜப்பான், ஜோர்டான், லெசோதோ, லிச்சென்ஸ்டீன், லக்ஸம்பர்க், நெதர்லாந்து, நோர்வே, சமோவா, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் ஐக்கிய இராஜ்யம் போன்ற அரசியலமைப்பு முடியாட்சி நாடுகளும் இதில் அங்கத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு டிசம்பர் 12-ம் தேதி, இதில் இணைய அமைச்சரவை முடிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து, ஜனவரி 15-ம் தேதி, 16-வது பேரரசர், சுல்தான் அப்துல்லா ரி’அயதுடின் அல்-முஸ்தஃபா பில்லா ஷா இப்னி சுல்தான் ஹஜி அஹமத் ஷாவிடம் அமைச்சரவையின் முடிவு அறிவிக்கப்பட்டது.