பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அழிக்க வேண்டும்- ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு அழிக்க வேண்டும் என ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமைகள் சபை கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மனித உரிமை ஆர்வலர்கள், பயங்கரவாத அச்சுறுத்தல் ஒரு பிராந்தியத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் இருப்பதாகவும், இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு அழிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசிய கட்சி தலைவர் சர்தார் சவுகத் அலி காஷ்மீரி பேசும்போது, பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளை பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக மறைமுகமாக போரை நடத்துவதாக குற்றம்சாட்டினார்.

‘இதுபோன்று பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து ஊக்குவித்தால் நமது நாடு மதங்கள் மற்றும் இனங்கள் வாரியாக ஆயிரம் துண்டாக பிளவுபட்டுவிடும். எனவே பாகிஸ்தான் தனது மனநிலையை மாற்றி பயங்கரவாத முகாம்களை அழிக்கும்படி ஐநா மனித உரிமைகள் சபையும் உலக நாடுகளும் வலியுறுத்தவேண்டும்’ என்றும் அவர் கூறினார்.

மற்றொரு மனித உரிமை ஆர்வலர் மிஸ்பார் ஹசன் பேசும்போது, ‘புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் போருக்கு ஆயத்தமானதால் உலகமே அதிர்ச்சியடைந்தது. இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகள் என்பதால், ஏதாவது தவறு நடந்தால் உலகிற்கே பேரழிவு ஏற்படும். எனவே, பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அரசு அழிக்க வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

-athirvu.in