எம்பி ஜொகூர் : மாசு நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது, அவசரக்கால அறிவிப்பு தேவையில்லை

ஜொகூர், பாசீர் கூடாங், கிம் கிம் ஆற்றில் வீசப்பட்ட இரசாயணக் கழிவினால் ஏற்பட்ட மாசு நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்கு அவசரக்கால அறிவிப்பு செய்ய தேவையில்லை என ஜொகூர் மந்திரி பெசார் (எம்பி) ஒஸ்மான் சபியான் கூறியுள்ளார்.

பாசீர் கூடாங் நகராண்மைக் கழகத்தில், சுமார் 3 மணி நேரம், மாநிலப் பேரிடர் நிர்வாகக் குழுவின் சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமையேற்ற ஒஸ்மான், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், பரப்ப வேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டார். அதேசமயம், சரியான தரப்பினரிடமிருந்து, சரியான தகவல்களைப் பின்தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தப் பேரிடரைத் திறமையாகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் நிர்வகிக்க அதிகாரிகளுக்கு, நம்பிக்கையோடு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் எம்பி மக்களுக்கு அறிவுறுத்தினார்.

“இப்போது நாம் யாரையும் விரல் நீட்டி குற்றம் சுமத்த வேண்டாம், எந்தத் தரப்பினரின் தவற்றையும் சுட்டிக்காட்ட வேண்டாம், இதில் அரசியல் விளையாட்டும் வேண்டாம். நமது முக்கிய கவனம் மாசு கட்டுப்பாட்டு வேலைகளிலும் அதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, உடனடி உதவிகளுக்காக RM6.4 மில்லியன் அவசர ஒதுக்கீட்டை மாநில அரசு அங்கீகரித்துள்ளதாக ஒஸ்மான் தெரிவித்தார்.

“சுத்திகரிப்பு நடவடிக்கையில் மூன்று குத்தகையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு நடக்கும் அப்பணிகள் நிறைவடைய ஒரு வாரம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் மேலும் சொன்னார்.

  • பெர்னாமா