இதற்கெல்லாம் அரசுதான் பதில் சொல்லியாக வேண்டும்! சிறீதரன் எம்.பி ஆதங்கம்

ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அரசிடம் தமது பிள்ளைகளை ஒப்படைத்தவர்கள், பிள்ளைகள் விசாரிக்கப்பட்டு ஏதோவொரு தண்டனையுடன் திரும்பி வருவார்கள் என்றே இன்னமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களிடம் போய் காணாமல்போனவர்கள் இன்னமும் உயிருடன் இருப்பார்களா என்று கேட்பதில் எந்தவித நியாயமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு அரசுதானே பதில் சொல்லவேண்டும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கேள்வியெழுப்புகின்றனர் என்வும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தங்களது உறவினர்களின் நிலை பற்றித் தெரிந்துகொள்ளவே எப்போதும் விளைவார்கள்.

ஆனாலும் 7 அல்லது எட்டு வருடங்களுக்கும்மேல் காணாமல்போனவர், இறந்தவராகவே கணிக்கப்பட வேண்டும் என்று சட்டம்சொல்கின்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீளத் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்மையில் இருக்கின்றதா?அல்லது காணாமல் ஆக்கப்பட்டோரின் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் உள்ளனவா? இதில் அரசியல் உள்நோக்கங்கள் எவையும் இருப்பதாகத் தெரியவில்லை.

அவர்களில் சிலரோடு நான் பேசும் போது தங்களது பிள்ளைகளை, கணவரை பிடித்துச் சென்றதாகவும். அவர்களுடன் பிடிபட்ட சிலர், ஏதோ வழிகளில் தப்பித்து வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பதாகவும் சொல்கின்றார்கள்.அதுமாத்திரமல்ல, அவ்வாறு தப்பித்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் தமது பிள்ளைகளோ அல்லது கணவரோ உயிருடன் இருப்பதாகச் சொன்னதாகவும் உறுதிபடச் சொல்கின்றார்கள். அவர்கள் இன்னமும் நம்பிக்கையுடன்தான் இருக்கின்றார்கள்.வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டார். அவர் தடுத்துவைக்கப்பட்ட போது அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த இன்னொருவர் பணம்கொடுத்து தன்னை விடுவித்து அந்நிய நாடொன்றுக்குச் சென்று விட்டார்.அவ்வாறு சென்றவர் தான் தடுப்பில் இருந்தபோது தனக்குத்தெரிந்த பலர் தடுப்புக் காவலில் இருந்ததையும் குறிப்பிட்ட ஆசிரியரும் அவர்களில் இருந்ததையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.ஆனால் ஆசிரியரின் உறவினர்கள் சென்று விசாரித்தபோது இல்லையென்பதே பதிலாகக் கிடைத்திருக்கின்றது. மண்டைதீவில் காணாமலாக்கப்பட்ட ஓரிருவர் தப்பித்து வெளிநாடுசென்று சாட்சியமும் அளித்திருக்கின்றார்கள்.காணாமலாக்கப்பட்டவர்களில் அனேகர் 2015 ஆவணி மாதம் வரையில் உயிருடன் இருந்திருக்கின்றார்கள். கடத்தப்பட்ட பலர் ஆட்சி மாற்றத்தின்போது கடந்தகால ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற​ கதைகளும் உலா வருகின்றன.

ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அரசிடம் தமது பிள்ளைகளை ஒப்படைத்தவர்கள், தங்களது பிள்ளைகள் விசாரிக்கப்பட்டு ஏதோவொரு தண்டனையுடன் திரும்பி வருவார்கள் என்றே இன்னமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களிடம் போய் காணாமல்போனவர்கள் இன்னமும் உயிருடன் இருப்பார்களா என்று கேட்பதில் எந்தவித நியாயமும் இல்லை. அரசிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு அரசுதானே பதில் சொல்லவேண்டும்?காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள் என்றே அவர்களின் உறவினர்கள் நம்புகின்றார்கள். அவர்கள் எப்போது திரும்புவார்கள் என்றே அவர்கள் ஜோதிடர்களின் வீடுகளுக்கு கண்ணிரோடு அலைந்து திரிகின்றார்கள்.அவர்களது நம்பிக்கைகள் வீண்போகா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது பிள்ளைகள் இருந்தால், அவர்களை திருப்பித் தரவேண்டும். அல்லாவிட்டால் அதற்கு உரிய பதிலை அவர்கள் தரவேண்டும்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மைநிலை குறித்து அரசு பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்களா?அரசாங்கம் பதிலைச் சொல்வதற்கான சாத்தியங்கள் உண்டா இல்லையா என்று வாதிட இயலாது. பொறுப்புள்ள அரசொன்று தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களின் நிலைபற்றி சொல்ல வேண்டியதுதானே நியாயம்?அவர்கள் பதில்சொல்வதற்கான சாத்தியங்கள் இல்லையென்பதற்காக நாங்கள் கற்பனையில் ஒரு பதிலை ஊகித்துச் சொல்ல முடியதே. அவ்வாறு தங்களது பிள்ளைகளின் நிலை என்னவென்பதை அறியாதவரை காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களது போராட்டம் தொடரத்தானே செய்யும்?காணாமலாக்கப்பட்டவர்களின் நிலைதொடர்பில் அரசுசொல்லப் போகும் பதில் அதனை சர்வதேச ரீதியாக மனித உரிமைக் கூண்டில் நிறுத்திவிடும் என்பதற்காக உறவினர்கள் போராடக் கூடாது எனில் உலகில் யுத்தம் இடம்பெற்ற இடங்களில் எல்லாம் அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி குரல் எழுப்பப்பட்டிருக்கவே முடியாதே?உறவினர்கள் ஒப்படைக்கப்பட்டமைக்கான கண் கண்ட சாட்சியங்கள் இருக்கையில் அவர்கள் எவரும் தம்மிடம் இல்லையென அரசு கூறுமாயின் அந்த அரசை மக்கள் நம்புவதெப்படி?

அதற்கெதிராகப் போராடாமல் விட்டால் எந்த நம்பிக்கையை அரசு தரும். காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் காணாமல் போனோருக்கான அலுவலகத்தை எதிர்க்கக் காரணம் என்ன?காணாமல் போனோருக்கான அலுவலகம் என்பது நஷ்டஈட்டைப் பெறுவதைப் பிரதானமாகக் கொண்டது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நஷ்ட ஈடென்பது வெறும் கண்துடைப்புத்தானே?நீதியை வழங்காமல் நஷ்டஈட்டை வழங்குவது காலத்தை இழுத்தடிப்புச் செய்யும் நடவடிக்கைதானே? காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான நஷ்டஈட்டைக்கொடுத்துக் கொண்டிக்கிறோம்.

அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை உலகுக்குச் சொல்லும் ஏற்படே இந்த அலுவலகம். நான் அண்மையில் அமெரிக்க தூதுவரைச் சந்தித்தபோது OMP பற்றி சுட்டிக்காட்டியிருந்தேன்.அவரும் அது அதிகாரமற்றதென்பதை ஏற்றுக்​கொண்டிருந்தார். நிபுணத்துவம் பெற்றவர்கள் யாரும் இதில் இல்லை. எனவே நியாயமான மதிப்பீடுகளுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டார். ​அடிப்படையில் OMP பலவீனமானது. அதனூடாக மாற்றங்கள் வரும் என்றால், அது இவ்வளவு காலத்துக்குள் நடந்திருக்க வேண்டும். அதனாலேயே மக்களுக்கு அதன் மீது நம்பிக்கை எழவில்லை.ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? மீண்டும் அரசுக்கு கூட்டமைப்பு கால அவகாசம் பெற்றுத்தரப் போகின்றது என்று பல கூக்குரல்கள் எழுகின்றனவே?அரசுக்கான கால அவகாசத்தை நாங்கள் கோரவில்லை. சர்வதேச மேற்பார்வைக்கான அவகாசத்தை அதிகரிக்குமாறுதான் நாங்கள் சொல்கின்றோம், சர்தேசத்தின் மேற்பார்வை இல்லாமற் போனால் எல்லாவற்றையும் அப்படியே கைவிடுவதா?ஒன்றும் வேண்டாம் என்றால் ஐ.நா சபையில் இதனைக் கைவிடுவதா என்பதே எம்முன்னுள்ள கேள்வி. நாங்கள் அவகாசம் வேண்டாம். எதுவும் வேண்டாம் என்றால், எல்லாவற்றையுமே மூடிவைத்துவிட்டு தப்பிப்பதற்கு அரசுக்கு மிகவும் உகந்த வழியொன்று கிடைத்து விடும்.

சர்வதேச நாடுகள் ஒரு பிரேரணையை கொண்டுவரும்போது, அதற்கு நாங்கள் ஓர் அழுத்தம் கொடுத்து அதனை முன்னகர்த்த வேண்டுமல்லவா?எங்கள் பிரச்சினையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கோ பாதுகாப்புச் சபைக்கோ கொண்டு செல்வதென்றால் வல்லரசு நாடுகளின் உதவியின்றி அது சாத்தியப்படாது.ஆனால் வல்லரசுகள் இலங்கையில் தமது பிடியை இறுக்குவதற்காக எம்மை ஒரு கருவியாகத்தான் பயன்படுத்துகின்றன. அவையும் நீதியின் பாற்பட்டு நடப்பதாகத் தெரியவில்லை.எனவே, நாங்கள் மேற்பார்வைவேண்டாம் என்று நிராகரித்து விட்டால் எமது அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதுதான் எங்கள் கேள்வி. கால அவகாசம் வேண்டாம் என்று எல்லோருமே கோருகின்றார்கள்.அப்படியானால் கால அவகாசத்தை நிராகரித்துவிட்டு என்ன செய்யப் போகின்றோம். அதற்காகத்தான் சர்வதேச மேற்பார்வைக்கான கால அவகாசத்தை நாங்கள் கோருகின்றோம்.இலங்கை ஏற்கெனவே ஏற்றுகொண்ட 30/1, 34/1 பிரேரணைகளின் அம்சங்கள் யாவும் சர்வதேச மேற்பார்வையின் கீழ் அமுல்செய்யப்பட வேண்டும் அதற்கான முழு ஆதரவும் எங்களால் வழங்கப்படும்.அண்மையில் கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தென்னாபிரிக்காவைப் போல நாங்களும் எல்லாவற்றையும் மறக்கவும் மன்னிக்கவும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அந்நிகழ்வின்போது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்ததாகவும் அவர்கள் அதற்கு மறுப்பேதும் கூறாததாகவும் சிலர் விமர்சிக்கின்றனரே?அதற்கு நாங்கள் எங்களது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்திருக்கின்றோம். நான் உட்பட கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டிருக்கிறார்கள்.மறப்போம் மன்னிப்போம் என்ற சொற்பதங்களுக்குள் எங்கள் பிரச்சினைகளை முடக்கிவிட நாம் தயாராக இல்லை. தென்னாபிரிக்காவில் 80 வீத கறுப்பினத்தவர்கள், 20 சதவீத வெள்ளையினத்தவர்களால் அடக்கப்பட்டனர்.அங்கு சமாதானமெனும் பொழுது அவர்கள் தங்களுக்கான விடுதலையைப் பெற்றபோது 20 சதவீதமான வெள்ளையினத்தவர்களை துவம்சம்செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் உலக நாடுகள் மண்டேலாவை வைத்து ஒரு காய்நகர்த்தலைச் செய்தன.அந்த அடிப்படையிலேயே உலக நாடுகள் மண்டேலாவை மறக்கவும் மன்னிக்கவும் பணித்தன.
அதன்படியே பெருந்தன்மையோடு அவர் ​நடந்து கொண்டார். எனவே அங்கு கையாளப்பட்ட இராஜதந்திரத்தை இங்கு கையாள முடியாது.இங்கு 72 வீதமான சிங்கள இனம், 28 சதவீத்துக்கும் குறைவான தமிழ், முஸ்லிம் இனங்கள் மீது அடக்குமுறையை பிரயோகிக்கின்றன.அதிலும் 18 சதவீதமான தமிழர்கள் இன அழிப்பு மற்றும் கொலைவெறித் தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள். பெரும்பான்மையான சிங்கள தேசிய இனம், அளவில் சிறிய தமிழ் தேசிய இனத்தின் மீது நடத்துகின்ற தாக்குதல்கள், கொலைகள், இன அழிப்புக்கள் காரணமாக இன்றும் ஒரு அச்சத்தின் மத்தியிலேயே தமிழ்ச் சமூகம் வாழ்கின்றது.அவ்வாறு வாழும் தமிழ் மக்களிடம் தென்னாபிரிக்காவின் நடைமுறை​யைப் பின்பற்றவேண்டும் எனச்சொல்வது எந்த வகையில் நியாயமானது? தீர்வை முன்வைத்த பின்னர் வேண்டுமானால் அவ்வாறு சொல்லலாம்.

இதுதான் எங்கள் அரசியல் தீர்வு என்று ஒன்றை ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கட்டும் அதன் பின்னர் மறப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம். ரணில் வினைத் திறனற்றவர்.அவர் காலத்தை இழுத்தடித்து மக்களைதெருவில் நிறுத்தும் வேலைகளை ​பார்ப்பார். அவர் எப்போதுமே இதய சுத்தியுடன் நடந்ததில்லை.அவர் எவ்வாறு விடுதலைப் புலிகளுடன் பேசியவாறே அவர்களை உடைத்தாரோ அவ்வாறே இன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதிலும் அதிக அக்கறை காட்டுகின்றார்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

-tamilcnn.lk

TAGS: