மைக்கா ஹோல்டிங்ஸ் பிரச்சனை குறித்த சரவாக் ரிப்போர்ட் அறிக்கையை விசாரியுங்கள், மஇகா வலியுறுத்து

மஇகா மத்திய செயலவை உறுப்பினர், பி புனிதன், மைக்கா ஹோல்டிங்ஸ் பிரச்சனை குறித்த சரவாக் ரிப்போர்ட் அறிக்கையை விசாரணை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், விசாரணையை விரைந்து மேற்கொள்ளுமாறு, காவற்படை மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இரண்டையும் அவர் கேட்டுக்கொண்டார்.

“நான் இதனை மிகவும் தீவிரமாகக் கருதுகிறேன், மைக்கா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் 66,000 முன்னாள் பங்குதாரர்களுக்கும், இன்னும் அதில் பங்கு வைத்திருப்போருக்கும் நீதியை உறுதி செய்ய ஒரே வழி, இந்த விசாரணையை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்வதே.

“போலிஸ் மற்றும் எம்ஏசிசி இந்த விசாரணையை விரிவாகவும் விரைவாகவும் மேற்கொள்ள வேண்டும்,” என்றார் புனிதன்.

சரவாக் ரிப்போர்ட்டின், ‘பங்குதாரர்களின் காணாமல் போன பணம் மீது, மைக்கா கடிதங்கள் மேலும் கவலையை எழுப்புகின்றன’ (‘Maika Papers Raise Further Concerns Over Shareholders Missing Money’.) எனும் கட்டுரையின் விளைவாக, இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது.

கடந்த மார்ச் 13-ம் தேதி வெளியிடப்பட்ட அந்தக் கட்டுரையில், RM140 மில்லியன் நிதி, “தவறாக” ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான நிறுவனத்தில் நுழைந்துவிட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.