பேராக் எம்பியைக் கவிழ்க்கச் சதியாம், அதற்குப் பிரதமர் ஆசியும் இருக்கிறாம்

பேராக் பிஎன் தலைவர் சாரானி முகம்மட், அம்மாநில மந்திரி புசாரைக் கவிழ்ப்பதற்கு நடக்கும் கீழறுப்பு வேலைக்குப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் ஆசியும் இருப்பதாகக் கூறினார்.

எம்பி அஹமட் பைசல் அஸுமுவைக் கவிழ்ப்பதற்கு ஆதரவு கேட்டு ஏற்கனவே பல அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த ஒரு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இப்போது மேலும் பல பிஎன் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்திருப்பதாக அவர் கூறினார் என சினார் ஹரியான் அறிவித்துள்ளது.

மந்திரி புசாரை அகற்றும் முயற்சிக்குப் பக்கத்தான் ஹரப்பான் தலைவருமான மகாதிரின் ஆசி இருப்பதாகவும் அவர் கூறினாராம்.

“மாநில அரசு நிலையாக இல்லை. ஆட்சிக்குழு உறுப்பினர்களில் சிலர் மந்திரி புசார் பதவிக்கு ஆசை கொண்டு அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் தேடுகிறார்கள்.

“பேரம் பேசுதல் தொடர்கிறது”, என்றவர் நேற்று ஈப்போவில் கூறினார்.

மாநிலச் சட்டமான்ற எதிர்க்கட்சித் தலைவரும் அம்னோ தலைவருமான சாரானி, 25 பிஎன் மற்றும் பாஸின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களில் எவரும் அந்த ஆட்சிக்குழு உறுப்பினருக்குத் துணை போக மாட்டார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

பைசல் தன்னைத் “திருத்திக்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்திய சாரானி, அவரது ஆட்சிக்குழுவில் உள்ளவர்களில் எவரேனும் அவரைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறாரா என்பதையும் அவர் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

கடந்த நவம்பரில், சாரானி, பேராக் கல்வி, தொழில்நுட்பம், அறிவியல், சுற்றுச்சூழல் குழுத் தலைவர் அசிஸ் பாரிதான் எம்பிக்கு எதிராக வேலை செய்கிறார் என்று கூறினார்.

அதன் விளைவாக அசிஸ், எம்ஏசிசியால் விசாரிக்கப்பட்டார்.

சாரானியும் மேலும் ஐந்து அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும்கூட எம்ஏசிசிக்கு அழைக்கப்பட்டு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்துகொள்ளப்பட்டன.