டாக்டர் எம் : ஜொகூர் எம்பி பாத்தாம் சென்றது எனக்கு தெரியாது

ஜொகூர், பாசிர் கூடாங் நச்சுக் கசிவு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் வேளையில், மாநிலச் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிப்பதற்காக, ஜொகூர் மந்திரி பெசார் (எம்பி) ஒஸ்மான் சாப்பியான் இந்தோனேசியா சென்றது அதிர்ச்சியளிப்பதாக டாக்டர் மகாதிர் முகமட் கூறியுள்ளார்.

இன்று புத்ராஜெயாவில், ஊடகச் சந்திப்பின் போது, ஒஸ்மானின் இந்தோனேசியப் பயணம் குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

“அவர் சென்றாரா? எனக்குத் தெரியாதே,” என மகாதிர் சுருக்கமாகப் பதிலளித்தார்.

2020 ஜொகூர் சுற்றுலா ஆண்டு பற்றி விளம்பரம் செய்ய, தற்போது ஒஸ்மான் பாத்தாமில் இருக்கிறார்.

சுங்கை கிம் கிம் இரசாயணக் கழிவுகளின் காரணமாக, ஆயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில், அந்தக் கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் பாத்தாம் சென்றுள்ளதைப் பல தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

இருப்பினும், மாநில அரசாங்கம் நச்சு மாசு பிரச்சனையைக் கையாளும் முயற்சியில் உள்ளது என்று ஒஸ்மான் தலைமையை, மகாதிர் பாதுகாத்து பேசினார்.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க, ஒஸ்மான் தனது சொந்த கருத்தைக் கொண்டிருக்கிறார் என்றும் மகாதிர் கூறினார்.