ஹரப்பான் -தொடர்புடைய வழக்குகள் எனில் நீதிச் சக்கரம் சுழலாது நின்று போகிறதா?

கடந்த ஆண்டு மே மாதம் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆட்சியில் உள்ளோர் செய்த தவறுகள் குறித்து நிறைய புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், இதுவரை ஒரு வழக்குக்கூட நீதிமன்றம் வந்ததில்லை.

ஆறு மாதங்களுக்கு முன்பு, உள்துறை துணை அமைச்சர் அசிஸ் ஜம்மானின் சிறப்பு அதிகாரி ஒரு பெண்ணை ஆபாசமாக படமெடுக்க முயன்றபோது பிடிபட்டார். அந்த அதிகாரி பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டாரே தவிர அவர்மீது வழக்குத் தொடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

கடந்த ஆண்டு பிகேஆர் உள்கட்சித் தேர்தல்களின்போது உறுப்பினர் பதிவுப் பிரச்னை காரணமாகக் கட்சி அதிகாரிகள் பலரை ஏம்ஏசிசி கைது செய்தது.

சரவாக் பிகேஆர் தலைவர் ஒருவர், வாக்குகள் விலைகொடுத்து வாங்கப்பட்டதற்கு “மறுக்கமுடியாத” ஆதாரங்களை எம்ஏசிசி-இடம் ஒப்படைத்திருப்பதாகக் கூறினார். அதன்மீதான விசாரணை என்னவாயிற்று என்று இன்று வரை தகவல் இல்லை.

கடந்த டிசம்பரில், பெல்டாவின் முன்னாள் தலைவர் இசா அப்துல் சமட் மீது ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டபோது அக்குற்றச் செயலில் பிரதமரின் அரசியல் செயலாளர் ஜாஹிட் முகம்மட் அரிப்புக்கும் பங்குண்டு என்று கூறப்பட்டது. ஆனாலும், ஜாஹிட் இன்னும் பதவியில் உள்ளார்.

ஜனவரியில், தற்காப்பு அமைச்சர் முகம்மட் சாபுவின் மகன்களில் ஒருவர் போதைப் பொருள் உட்கொண்ட குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணை அறிக்கைகள் அரசு வழக்குரைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கேமரன் மலை இடைத் தேர்தல் பரப்புரைகளின்போது ஹரப்பான் வேட்பாளர் எம். மனோகரனும் நில, இயற்கைவள துணை அமைச்சர் தெங்கு சுல்பூரி ஷா ராஜா பூஜியும் தேர்தல் குற்றங்கள் இழைத்ததாக நிறைய போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன.

மலேசியாகினியும், இவைமீது என்ன என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்ள போலீசையும் எம்ஏசிசி-யையும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தையும் பலமுறை தொடர்புகொண்டு பார்த்தது.

பதிலே இல்லை.

இதை சி4 செயல் இயக்குனர் சிந்தியா கேப்ரியலிடம் தெரிவித்தபோது அவரும் வருத்தப்பட்டார்.

“அதிகாரிகள் மற்ற வழக்குகளை விசாரிப்பதில் காண்பிக்கும் வேகத்தை அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் சம்பந்தப்பட்ட வழக்குகளிலும் காண்பிப்பது முக்கியம். அதுதான் வெளிப்படைத் தன்மை, பொறுப்புடைமை”, என்றார்.

வழக்குகள் குறித்த விவரங்களை அடிக்கடி இற்றைப்படுத்துவது அதிகாரிகள் பாகுபாடின்றி நடந்துகொள்ளவதையும் சட்டத்தை முறையாக பின்பற்றுகிறார்கள் என்பதையும் காண்பிக்கும்.

“ஜனநாயகத்தில் சலுகை காண்பிப்பதற்கு இடமில்லை. எல்லாரும் சட்டத்துக்கு உள்பட்டவர்களே”, என்றாரவர்.