“நான் காஷ்மீர் மக்களுக்காக போராட விரும்புகிறேன்” – இரோம் ஷர்மிளா

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் அமலிலுள்ள ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை எதிர்த்து தனது 16 ஆண்டுகால உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட பின்பு இரோம் ஷர்மிளா, போராட்ட குணத்தை விட்டுவிட்டாரா?

மிக நீண்ட காலத்திற்கு ஒரே குறிக்கோளை கொண்டிருந்த அவர் தற்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறார்? இயல்பான வாழ்க்கைப்போக்கு அவருக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லையா? போன்ற பல்வேறு கேள்விகளுடன் இரோம் ஷர்மிளாவை தேடினேன்.

எனது தேடலின்போது, அவர் தற்போது மணிப்பூரில் இல்லை என்பதையும், அவர் உருவாக்கிய அரசியல் கட்சியின் உறுப்பினர்களுடன்கூட அவருக்கு தொடர்பில்லை என்றும் தெரிந்துக்கொண்டேன்.

பிறகு, இரோம் ஷர்மிளா தனது ஆண் நண்பரான பிரிட்டனை சேர்ந்த டெஸ்மாண்ட் கொடின்ஹோ என்பவரை திருமணம் செய்துகொண்டு, தற்போது பெங்களூருவில் வசித்து வருவது தெரியவந்தது.

பெங்களூருவில் புறநகர் பகுதியில் சிறியதொரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இரோம் ஷர்மிளாவை பெரும் தேடலுக்கு பின்பு சந்தித்தேன்.

இரோம் ஷர்மிளா மிகவும் பொறுமையாக பேசுகிறார். சில நேரங்களில் புன்னகைக்கிறார். ஆனால், ஏதோ ஒன்று அவரது உள்ளத்துக்குள் பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது என்று தெரிகிறது.

“எனது முடிவற்ற போராட்டம் மற்றும் அதன் மீதான மக்களின் எதிர்வினை எனது மனதில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக நான் தற்போது காஷ்மீர் மக்களுடன் இருக்க விரும்புகிறேன். அங்கே என்ன செய்ய முடியும் என்பதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று இரோம் ஷர்மிளா கூறியதை கேட்டதும் நான் ஆச்சர்யமடைந்துவிட்டேன்.

இலங்கை

யார் இந்த இரோம் ஷர்மிளா?

இரோம் ஷர்மிளா
இரோம் ஷர்மிளா

கடந்த நான்கு தசாப்தங்களாக மணிப்பூர் மாநிலம் வன்முறை கிளர்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1979 மற்றும் 2002-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை கிளர்ச்சியில் 1500-க்கும் மேற்பட்ட சட்ட விரோதக் கொலைகளை போலி என்கவுண்டர்கள் மூலம் இந்திய ராணுவம் நிகழ்த்தியது என அந்த மாநிலத்தின் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்திய பாதுகாப்பு படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி, இது போன்ற படுகொலைகளில் இந்திய ராணுவம், அசாம் ரைபிள் படைப்பிரிவு மற்றும் மணிப்பூர் காவல்துறை ஈடுபட்டு வருவதாக அந்த அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் நடைமுறையிலுள்ள ஆயுதப்படைப் பிரிவுகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக தனது உண்ணாவிரதத்தை இரோம் ஷர்மிளா கடந்த 2000ஆம் ஆண்டு தொடங்கினார்.

பிடியாணை இல்லாமல் கைது செய்வது, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சுட்டு கொல்வது போன்ற சிறப்பு அதிகாரங்களை இந்த சட்டம் படைவீரர்களுக்கு வழங்குவதற்கு எதிராக அவருடைய இந்த போராட்டம் நடைபெற்றது.

மணிப்பூர், இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த ஆயுதப்படைப் பிரிவுகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

2016ஆம் ஆண்டு உலகின் மிக நீண்ட உண்ணாவிரத போராட்டத்தை இரோம் ஷர்மிளா முடிந்து கொள்வதாக அறிவிக்கும் வரை அவருக்கு மூக்கில் பொருத்தப்பட்ட ஒரு குழாய் வழியாக கட்டாயமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.

19 ஆண்டுகளுக்கு முன்னதாக மணிப்பூரில் 10 பொது மக்கள் இந்தியப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, ஷர்மிளா இந்த உண்ணாவிரத்தை தொடங்கினார்.

தனது உண்ணாவிரதத்தின் பெரும்பால காலத்தை மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் கழித்தார். அங்கு மருந்தும், நீராகார உணவுகளும் அவருக்கு கட்டாயமாக செலுத்தப்பட்டு வந்தது.

இரோம் ஷர்மிளா

தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்த நீதிமன்றம், 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷர்மிளாவை விடுதலை செய்தது.

ஆனால், அவருடைய போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மறுத்துவிட்டதால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அவருடைய இந்த போராட்டம் உலக அளவில் அவருக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அம்னெஸ்டி சர்வதேச சபை அவரை மனசாட்சியின் கைதி என்று வர்ணித்தது.

ஏறக்குறைய இரண்டரை மில்லியன் (25 லட்சம்) மக்கள்தொகை கொண்ட மணிப்பூரில், கிளர்ச்சி குழுக்களை எதிர்த்து போராட பெரியதொரு படைப்பிரிவும், துணை ராணுவப் படையும், மாநில காவல்துறையும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

படுதோல்விடைந்த இரோம் ஷர்மிளா

கடந்த 2014ஆம் ஆண்டு இரோம் ஷர்மிளா மோசமான உடல்நிலையில் மருத்துவமனையில் இருந்தபோது, நான் அவரை சந்தித்தேன். அப்போது, தான் தேவதையாகவோ அல்லது துறவியாகவோ இருக்க விரும்பவில்லை என்று இரோம் ஷர்மிளா கூறினார்.

தனது நீண்டகால போராட்டத்தின் காரணமாக மக்களுடனான நேரடி தொடர்பை தான் இழந்துவிட்டதாக அவர் அப்போது கூறியிருந்தார்.

"நான் காஷ்மீர் மக்களுக்காக போராட விரும்புகிறேன்" - இரோம் ஷர்மிளா

2016ஆம் ஆண்டு இரோம் ஷர்மிளா தனது 16 ஆண்டுகால போராட்டத்தை முடிந்துகொள்வதற்கு அதுகூட காரணமாக இருக்கலாம். உலகிலேயே மிக நீண்ட தனது உண்ணாவிரதத்தை

சிறிது தேனை பருகி முடித்துக்கொண்ட இரோம் ஷர்மிளா, “நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். ஏனெனில், மக்களால் என்னை சாதாரண மனிதராக பார்க்கமுடியவில்லை” என்று அப்போது கூறினார்.

இருப்பினும், இரோம் ஷர்மிளாவின் அப்போதைய முடிவை அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கவில்லை. குறிப்பாக, உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட பிறகு இரோம் ஷர்மிளாவுக்கு தங்குவதற்கு கூட யாரும் இடம்தர முன்வரவில்லை.

அதன் காரணமாக, இரோம் தனது முதல் நாள் இரவை தான் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த மருத்துவமனையிலேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதையடுத்து இரோம் ஷர்மிளா தனது வாழ்க்கையில் இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்தார். ஒன்று, அரசியல் கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிடுவது, இரண்டு தனது ஆண் நண்பரான டெஸ்மாண்ட்டை திருமணம் செய்துகொள்வது.

தனது முதலாவது முடிவில் இரோம் ஷர்மிளா படுதோல்வி அடைந்தார் என்றுதான் கூற வேண்டும். ஆம், மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் இரோம் ஷர்மிளாவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 18,649 வாக்குகள் பெற்ற நிலையில், இவரால் 90 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.

இரோம் ஷர்மிளா

அதே நேரத்தில், இரோம் ஷர்மிளாவின் இரண்டாவது முடிவு அவரது வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப்போட்டுவிட்டது. தற்போது கர்ப்பமாக உள்ள இரோம் ஷர்மிளாவின் வயிற்றில் இரண்டு சிசுக்கள் உள்ளன.

தாய்-தந்தையை இழந்த குழந்தைகள் வாழும் காஷ்மீரிலுள்ள காப்பகத்தில் தனது குழந்தைகளையும் வளர்ப்பதற்கு இரோம் ஷர்மிளா விரும்புகிறார். அதாவது, அதுபோன்ற காப்பகங்களில் ‘தொலைந்துபோனவர்களின்’ குழந்தைகளும், போராட்டங்களின்போதும், தீவிரவாத தாக்குதல்களின்போதும் கொல்லப்பட்டவர்களின் குழந்தைகள் வசித்து வருகின்றனர்.

மணிப்பூரை போன்று காஷ்மீரிலும் சிறப்பு ஆயுதப்படை சட்டம் பல்வேறு ஆண்டுகாலமாக அமலில் உள்ளன. இரோமின் கருத்துப்படி, இது அதிகமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கிறது.

காஷ்மீர் பயணம்

டெஸ்மாண்ட் கொடின்ஹோ
டெஸ்மாண்ட் கொடின்ஹோ

இரோம் ஷர்மிளாவும், அவரது கணவரும் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த ஆண்டு சென்று வந்தனர்.

குறிப்பாக 1991ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தினர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் குனான் மற்றும் போஷ்ப்போரே என்னும் இரட்டை நகரத்திற்கு சென்றனர்.

“தங்களது கிராமத்தை பார்க்க வரும் வெளியாட்கள் தங்களுக்கு ஒன்றும் செய்வதில்லை என்ற கோணத்தில் அந்த மக்கள் இருந்தாலும், அவர்களை எங்களை ஒன்றும் செய்யவில்லை” என்று டெஸ்மாண்ட் கூறுகிறார்.

மேலும், இந்தியா-பாகிஸ்தானுக்கிடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியிலுள்ள டார்டுபோரா என்ற கிராமத்திற்கு தாங்கள் சென்றபோது, அங்கு இருந்த பெரும்பாலான பெண்கள் கணவனை இழந்தவர்கள் என்பதும், காரணமாக அவர்களது மகள்களை யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை என்பதும் தெரியவந்ததாக இரோம் ஷர்மிளா கூறுகிறார்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் வாடும் காஷ்மீர் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமென்று எண்ணுவதாக இரோம் ஷர்மிளா கூறுகிறார்.

நம்பிக்கை

"நான் காஷ்மீர் மக்களுக்காக போராட விரும்புகிறேன்" - இரோம் ஷர்மிளா

யாரும் எதிர்பாராத வேளையில் தனது உண்ணாவிரதத்தை முடித்தது, தேர்தலில் தோல்வி, அடுத்ததாக திருமணம் என இரோம் ஷர்மிளாவின் செயல்பாடு பலரது ஆதரவை இழப்பதற்கு வித்திட்டது ஒருபுறமிருக்க, அவரது எண்ணோட்டம் கூட மறுபாடடைந்துள்ளது எனலாம்.

ஏனெனில், மணிப்பூரில் சிறப்பு ஆயுத சட்டத்தை விலக்குவது மட்டும் தீர்வல்ல என்று கூறும் இரோம், “என்னால் தனியாக மாற்றத்தை கொண்டுவர முடியாது என்பதை தற்போது உணருகிறேன்; மாற்றத்தை கொண்டுவரும் பொறுப்பு ஒரே ஒருவருக்கு மட்டும் இல்லை” என்று அவர் மேலும் கூறுகிறார்

அரசியலில் துளியும் நம்பிக்கையை இழந்துள்ள இரோம் ஷர்மிளா, தற்போது மக்களுடன் மக்களாக வாழ்வதன் மூலம் மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறார். -BBC_Tamil

TAGS: