‘சினிமாவுக்குத் தடை ஆனாலும் கிளந்தானில் எச்ஐவி சம்பவங்கள் அதிகம், இது ஏன்?’

கிளந்தான் பாஸ் அரசாங்கம் சினிமா கொட்டகைகளைத் திறக்க மறுப்பது, நாட்டை ஆளும் திறன் அக்கட்சிக்கு இல்லை என்பதைக் காட்டுவதாக மாநில டிஏபி சட்டமன்ற உறுப்பினர் சோங் ஸெமின் கூறினார்.

கிளந்தான் ஊராட்சி, வீடமைப்பு, சுகாதாரக் குழுத் தலைவர் இஸானி உசேன், சினிமாக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தாலும்கூட சமூகச் சீரழிவு நிகழ்வதைத் தடுக்க இயலாது என்று கூறியதற்கு எதிர்வினையாற்றியபோது சோங் இவ்வாறு கூறினார்.

அது ஒரு “ஆதாரமற்ற, பொருளற்ற” வாதம் என்றவர் வருணித்தார்.

கடந்த முப்பதாண்டுகளாக கிளந்தானில் சினிமா இல்லை. ஆனாலும் எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டோர் அதிக எண்ணிக்கையில் அம்மாநிலத்தில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

“ படக் கொட்டகைகளைத் திறந்தால் சமூகச் சீரழிவு அதிகரிக்கும் என்பதற்கு ஆதாரமில்லை. கிளந்தானைத் தவிர மலேசியாவின் மற்ற மாநிலங்களில் சினிமா படங்கள் காண்பிக்கப்படுகின்றன.

“கிளந்தானில் சினிமாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது ஏன் என்று பாஸ் அரசாங்கம் விளக்கம்தர வேண்டும்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.