சிகரெட், மதுபானக் கடத்தலுக்குச் சுங்கத்துறை அதிகாரிகள் உடந்தை?

சிகரெட், மதுபான இறக்குமதிக்குக் கொடுக்கப்படும் உரிமங்கள் சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியுடன் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுவதாகவும் அதற்காக அதிகாரிகளுக்கு ரிம50,000 வரை “காப்பிக் காசு” கொடுக்கப்படுவதாகவும் ஒரு தகவல் கசிய விடப்பட்டுள்ளது.

அதைச் சுங்கத்துறை மறுக்கிறது.

தகவல் தெரிவித்தவர், இது எப்படி நடக்கிறது என்பதையும் மலேசியாகினியிடம் விவரித்தார்.

சுங்கத்துறை, இறக்குமதி உரிமங்களுக்கு விண்ணப்பிக்கும் புதுப்புது நிறுவனங்களுக்கு உதவுகிறதாம்.

“கடத்தல்காரர்கள் இறக்குமதி உரிமம் வழங்கும் உயர் அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு செயல்படுகிறார்கள். இப்போதுகூட சிகரெட் மற்றும் மதுபான இறக்குமதிக்கு அனுமதி கேட்கும் 500 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

“பல நிறுவனங்கள் மூலதனம் இல்லாமலேயே நிறுவப்படுகின்றன. அலுவலகத்துக்கு இடம்கூட இருக்காது. ஆனாலும் மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள மதுபாங்களையும் சிகரெட்டுகளையும் இறக்குமதி செய்கின்றன.

“இறக்குமதி செய்வதற்கான உரிமம் கிடைத்த பின்னர், அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக என்று கூறி மற்ற நாடுகளிலிருந்து சிகரெட்டுகளையும் மதுபானங்களையும் தீர்வையற்ற பகுதிகளுக்குள் இறக்குமதி செய்கின்றன.

“பிறகு அப்பொருள்களை மலேசியச் சந்தைக்குள்ளேயே தள்ளி விடுவார்கள், எந்த வரியும் கட்டுவதில்லை. இத்தனையும் சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியுடன் நடக்கிறது.

“மில்லியன் கணக்கில் ஆதாயம் கண்ட பின்னர் நிறுவனங்களை இழுத்து மூடி விடுவார்கள். பிறகு அவர்களே வேறு பெயரில் புதிய நிறுவனங்களை அமைப்பார்கள்”, என்றவர் தெரிவித்தார்.

1988 சுங்கத்துறைச் சட்டம் (இறக்குமதித் தடை) 2017-இல் திருத்தம் செய்யப்பட்ட பின்னரே இது அதிக அளவில் நடப்பதாக அவர் கூறினார்,

அத்திருத்தம் பொருளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அதற்கான இறக்குமதி உரிமங்கள் வைத்திருப்பது கட்டாயம் என்று வலியுறுத்துகின்றது.

“புது இறக்குமதி உரிமங்களுக்கு மனுச் செய்வோரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் ‘காப்பிக் காசு’ என்று ரிம30,000-த்திலிருந்து ரிம50,000வரை கறந்து விடுவார்கள்.

“இதில் இன்னும் மோசமான விசயம் என்னவென்றால், சில நிறுவனங்கள் இறக்குமதி நடவடிக்கைகளுக்காக வழக்குகளை எதிர்நோக்கும் ஆனால், அவற்றுக்கும் புது உரிமங்கள் வழங்கப்படும்”, என்றவர் கூறினார்.

இது பற்றிச் சுங்கத்துறை இடைக்கால தலைமை இயக்குனர் பெடி அப்துல் ஹாலிமைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

நிறுவனங்களின் பின்னணியை முழுமையாக ஆராய்ந்த பிறகே உரிமங்கள் வழங்கப்படுகின்றன. எனவே, உரிமங்கள் தகுதியற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.