இனவாதி என்று கூறுமுன்னர் என் கடந்தகாலச் சாதனைகளை எண்ணிப் பார்ப்பீர்- மாட் ஹசான்

அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான், தம்மை இனவாதி என்று முத்திரை குத்துவோர் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தாம் செய்துள்ள பணிகளை எண்ணிப்பார்க்க வேண்டும் என்றார்.

நெகிரி செம்பிலான் மந்திரி புசாராக இருந்தபோது தேவாலயம், கோயில்கள் கட்ட நிலம் ஒதுக்கிக் கொடுத்ததோடு மலாய்க்கார்-அல்லாதாருக்கு நிறைய உதவி செய்திருப்பதாகவும் முகம்மட் த ஸ்டார் நாளேட்டிடம் கூறினார்.

“நெகிரி செம்பிலானுக்கு வந்து பாருங்கள், மந்திரி புசாராக இருந்தபோது நான் செய்தவற்றை. இந்து, சீனக் கோயில்கள் கட்டவும் தேவாலயங்கள் கட்டவும் நிலம் கொடுத்தேன்.

“ரந்தாவில் உள்ள கம்போங் சாகா, கம்போங் பாசிர் செல்லுங்கள், அங்கு பல ஆண்டுகளாக வீடு கட்டிக்கொள்ள இடமில்லாதிருந்த குடியிருப்பாளர்கள் சொந்த நிலம் பெறுவதற்கு நான் செய்த உதவியைப் பாருங்கள்”, என்று சொன்னவர் தாய்மொழிப் பள்ளிகளுக்கும் என்ஜிஓ-களுக்கும்கூட உதவியிருப்பதாகவும் கூறினார்.

வர்த்தகம் செய்வது எப்படி என்பதைச் சீன நண்பர்களிடம் கற்றுக்கொண்டதாகக் கூறிய முகம்மட், ரந்தாவில் சீனப் புதுக் கிராமத்தில் வளர்ந்த தாம் இனவாதியாக இருப்பது அசாத்தியம் என்றார்.

முகம்மட், ஏப்ரல் 13-இல் ரந்தாவ் இடைத் தேர்தலில் அங்கு ஏற்கனவே மூன்று தடவை பெற்ற வெற்றியைத் தக்கவைத்துள்ள மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுப் பொதுத் தேர்தலில் அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததால் இந்த இடைத்தேர்தல்.