தேசியக் கடன் தீர்க்கப்படும்வரை வயிற்றை இறுகக் கட்டிக் கொள்ளுங்கள்: அரசு ஊழியர்களுக்கு மகாதிர் அறிவுறுத்து

இப்போதைய அரசாங்கம் முந்தைய அரசாங்கம் சேர்த்து வைத்துள்ள கடனைக் குறைப்பதற்குப் போராடி வருவதால் அரசுப் பணியாளர்கள் செலவுகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.

மகாதிர் இன்று காலை செர்டாங், யுனிவர்சிடி புத்ரா மலேசியாவில் கியூபெக்ஸ் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் உரையாற்றினார்.

“நாம் பொறுமை காக்க வேண்டும். கடனை ஓரளவு குறைத்துள்ளோம். ஆனால் ரிம1ட்ரில்லியன் கடனைத் தீர்ப்பது எளிதல்ல.

“கடனைக் கட்டி முடிக்கும்வரை அரசாங்க ஊழியர்கள் சிறிது காலத்துக்கு வயிற்றை இறுகக் கட்டிக் கொள்ள வேண்டும்.கடன் கட்டி முடிக்கப்பட்டதும் பணம் இருக்கும் செலவு செய்யலாம்”, என்றார்.

முந்தைய அரசாங்கம் எக்கச்சக்கமான கடனைச் சேர்த்து வைத்து விட்டதால் நாட்டின் நிதி நிலை சிரமத்தில் உள்ளது என்று மகாதிர் குறிப்பிட்டார்.

“எந்தவொரு பிரச்னையும் இல்லையென்றால் இன்னும் மூன்றாண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்படுத்த முடியும் என்று நம்புகிறோம்”, என்றாரவர்.