” தேனியில் தொடரும் காட்டுத் தீ ” அச்சத்தில் தேனி மக்கள்.

தமிழ்நாட்டின் தென்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் முற்றிலும் சூழ்ந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் கண் கவர் மாவட்டம் தான் தேனி, எங்கு பார்த்தாலும் மனதை கொள்ளை கொள்ளும் பச்சை பசேல் என்று இருக்கும். மாவட்டத்தில் வயல் வெளிகளும், மாவட்டத்தைச் சுற்றி மலைகளும் மிக அழகாக அமைந்துள்ளது. மதுரை மாவட்டத்துடன் இணைந்திருந்த தேனி மாவட்டத்தை தனி மாவட்டமாக அரசாணை எண் 679-இல் படி 25.7.1996 அன்று ஆணை பிறப்பித்து 01.01.1997 அன்று முறையாக தேனி மாவட்டம் உருவானது. இந்த மாவட்டத்தின் முதல் ஆட்சியாளர் என்ற பெருமையை திரு.கே.சத்திய கோபால் அவர்கள் பெற்றுள்ளார். இந்த மாவட்டத்தின் முக்கிய தொழில் விவசாயம் தான்.

தமிழ்நாட்டில் விவசாயத்தில் தஞ்சைக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டம் விளங்குகிறது. முக்கிய பயிர்களாக நெல், வெற்றிலை, கரும்பு, வாழை, நிலக்கடலை ஆகியவை பயிரிடப்படுகின்றனர். மேலும் மலைப்பகுதியில் தோட்டப்பயிர்களாக தேயிலை,திராட்சை,காபி, ஏலக்காய் போன்றவைகளும் பயிரிடப்படுகின்றனர். இயற்கை முறையில் ஆறுகளை மையமாக கொண்டு மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

1) பெரியாறு நீர் மின்சக்தி நிலையம்
2)சுருளியாறு நீர் மின்சக்தி நிலையம்
3)வைகை நுண் புனல் மின் நிலையம்

இவை தவிர தேனி, ஆண்டிபட்டி,கண்டமனூர்,போடி ஆகிய பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் காற்றை பயன்படுத்தி காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. கடந்தாண்டு 2018, மார்ச் 11-ம் தேதி தேனியில் போடி அருகேயுள்ள குரங்கணி தெற்கு பீட் வனப்பகுதியில் கொழுக்கு மலை அருகே ஒத்தைமரம் பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கிய மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் உயிரழந்த சம்பவம் தழிழகத்தையே திரும்பிப் பார்க்க செய்தது.

இதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக போடி மலைப்பகுதியில் மற்றும் கொடைக்கானல் மலைச் சாயல் அருகில் உள்ள முருகமலையில் இரண்டிலிருந்து மூன்று மணிநேரத்திற்கும் மேலாக காட்டுத்தி ஏற்பட்டது.இத்தீ குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே அடிக்கடி தொடர்ந்து ஏற்படுகின்றன. இதற்கு அப்பகுதியில் உள்ள சில சமூக விரோதிகளே காரணமாக உள்ளனர். குறிப்பாக மாலைப் பொழுதில் ஒரு சிலர் மறைமுகமாக மலைப்பகுதிக்குச் சென்று தீயை மூட்டுகின்றனர்.இதனால் அப்பகுதியில் இயற்கை வளங்கள் மற்றும் மிக நீண்ட நாட்களாக வளர்ந்து வந்த மரங்களும் அழிந்துவிடுகின்றன. இதனை வனத்துறையினரும், காவல்த்துறையினரும் கண்டுக்கொள்வதில்லை. இச்செயல் மேலும் தொடருமேயானால் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து இயற்கை வளங்களும் அழிந்து விடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்ற அச்சத்தில் தேனி மாவட்ட மக்கள் உள்ளனர்.

-nakkheeran.in

TAGS: