வாக்காளர்கள் செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு ! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

முதன்முறையாக வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் இந்திய மதிப்பில் 7000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கிலுள்ள மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்திலும், எதிர்வரும் 11ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

அப்பகுதியில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு குறைவாகவே பதிவாகியுள்ளது. இந்நிலையில், இந்த தடவை வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது.

அந்தவகையில், வாக்காளர்கள் வாக்குப்பதிவு முடிந்ததும் ஆட்காட்டி விரலில் வைக்கப்பட்டுள்ள மையை செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

வாக்களித்ததை உறுதிசெய்ததை காட்டும் மிகச்சிறந்த செல்பிக்கு முதல் பரிசாக 7 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அதேநேரம் 2ஆவது சிறந்த செல்பிக்கு 3 ஆயிரம் ரூபாயும், 3ஆவது சிறந்த செல்பிக்கு 2 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மிசோரம் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்ற போது சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. தற்போது நாடாளுமன்ற தேர்தலில் 7 லட்சத்து 23 ஆயிரத்து 663 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேரை வாக்களிக்க வைக்க மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆசிஷ்குந்த்ரா இந்த முயற்சியை எடுத்துள்ளார்.

-eelamnews.co.uk

TAGS: