பெல்டா தலைமையகத்தில் 100 புதிய கார்கள் குவிந்து கிடக்கின்றன- அன்வார்

கோலாலும்பூர் நகர மத்தியில் உள்ள பெல்டா தலைமையகத்தில் 100 புதிய கார்கள் அடைத்துக் கொண்டு நிற்பதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

நட்டப்பட்டுக் கிடக்கும் பெல்டாவை மீட்டெடுக்க அரசாங்கம் ரிம6.23 பில்லியன் செலவிட வேண்டியுள்ளதை நினைத்து வருத்தப்பட்டபோது போர்ட் டிக்சன் எம்பி இதைத் தெரிவித்தார்.

“நட்டப்பட்டுக் கிடக்கும் வேளையில் பெல்டா, 100 கார்கள் வாங்கியதாக அறிகிறேன்.

“பெல்டா தலைமையகத்தை இந்தப் புதிய கார்கள் அடைத்துக் கொண்டு நிற்கின்றன.

“மக்களும் பெல்டா குடியேறிகளும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இக்கார்கள் வாங்கப்பட்டுள்ளன. அவசரத் தேவை போலும்”, என்றாரவர். அன்வார், இன்று நாடாளுமன்றத்தில் பெல்டா வெள்ளை அறிக்கைமீதான விவாதத்தில் கலந்துகொண்டார்.

ரிம400,000 ஆக இருந்த பெல்டா நடைமுறைச் செலவினம் முகம்மட் இசா அப்துல் சமட் அதன் தலைவரானதும் ரிம1.4 பில்லியன் ஆயிற்று என்றார்.

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஒரு தடவை பெல்டா குளோபல் வ்ண்ட்சர்ஸ் ஹொல்டிங் பெர்ஹாட்டுக்கு (எப்ஜிவி)ச் சென்றுவர வேண்டும் என அன்வார் கேட்டுக்கொண்டார். அதன் தலைவர் அறை பிரதமரின் அறையைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரிதாம்.