ஜாலியன்வாலாபாக் படுகொலை: ஒரு நூற்றாண்டு துயரத்திற்கு வருத்தம் கோரியது பிரிட்டன்

ஜாலியான்வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரீசா மே வருத்தம் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 13ஆம் தேதியுடன் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து நூறு ஆண்டுகள் ஆக போகிறது.

இந்த சூழலில் ஜாலியன்வாலாபாக் படுகொலைகளுக்காக பிரிட்டன் மன்னிப்பு கேட்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், அந்நாடு இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளது.

ஜாலியன்வாலாபாக் படுகொலை

ஜாலியன்வாலாபாக் படுகொலை சம்பவம் நடந்து வரும் ஏப்ரல் 13ஆம் தேதியுடன் 100 ஆண்டுகள் ஆகின்றன. எனினும், அதில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்னும் அந்தச் சோகத்தைச் சுமந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

jallianwala bagh

பிரிக்கப்படாத இந்தியாவில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதியன்று நடைபெற்ற அந்தப் படுகொலைகள் விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக உருவெடுத்தது.

என்ன நடந்தது?

பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு எட்வர்டு ஹேரி டையர் உத்தரவின்பேரில், ஜாலியன்வாலாபாக்கில் வைசாகி விழாவைக் கொண்டாடக் கூடியிருந்தவர்கள் மீது துப்பாக்கி ஏந்திய 50 ராணுவத்தினர் சுடத்தொடங்கினர்.

அந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாகவும், 1,100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2013இல் இந்தியா வந்திருந்த அப்போதைய பிரிட்டன் பிரதமர் ஜேம்ஸ் கேமரூன் அந்தப் படுகொலைகளை ‘வெட்கக்கேடானது’ என்று கூறினார். ஆனால், அப்போது மிகவும் தாமதமாகியிருந்தது.

அந்த சம்பவத்தில் பலியானவர்களின் உறவினர்கள் இன்னும் தங்கள் நினைவுகளில் இறந்தவர்களைத் தாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் பிபிசியிடம் தங்கள் கதைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சத்பால் ஷர்மா, அப்போது 45 வயது ஆகியிருந்த தன் தாத்தா அமின் சந்த், அமிர்தசரசு நகரின் சூழ்நிலை மிகவும் பதற்றமானதாகவே இருந்தது என்பதை அறிந்தும் நீளமான கறுப்பு நிறக் கோட் மற்றும் வெள்ளை நிறப் பைஜாமா அணிந்துகொண்டு சென்றதாக விவரிக்கிறார். பாரம்பரிய மருத்துவரான தனது தாத்தா துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது மேடைக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்ததாக அவர் கூறுகிறார்.

ஜாலியன்வாலா பாக்கில் முன்னாள் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்

“ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் என் தந்தையால் என் தாத்தாவைத் தேடித் செல்ல முடியவில்லை. அடுத்த நாள் ஜாலியன் வாலாபாக்கில் குவிந்து கிடந்த உடன்களின் மத்தியில் என் தாத்தாவின் உடலையும் கண்டார் என் தந்தை,” என்கிறார் சத்பால்.

கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சத்பாலின் பாட்டியும், தந்தையும் ஜாலியன்வாலா பாக் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

“எங்களுக்கு திருமணம் நடந்தபின் முதலில் எங்களை பொற்கோவிலுக்கு அழைத்துச்செல்லாமல், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த ஜாலியன்வாலா பாக்கிற்கே என் மாமனார் எங்களை அழைத்துச் சென்றார்,” என்று கூறும் சத்பாலின் மனைவி கிருஷ்ணா ஷர்மா, “எப்போதெல்லாம் ஜாலியன்வாலா பாக் பற்றிப் பேசுகிறாரோ அப்போதெல்லாம் அவர் கண்ணீர்விடுவதைக் கண்டுள்ளேன்,” என்று தனது கணவரின் தந்தை பற்றி நினைவுகூர்கிறார்.

தனது பள்ளிப்படிப்பின்போது ஜாலியன்வாலா பாக் பற்றி மிகவும் விரிவாகக் கற்றுக்கொடுக்கப்படவில்லை என்று கூறும் கிருஷ்ணா, அந்த சோகமான நிகழ்வைப் பற்றி அறிவதற்காக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தன் குழந்தைகளை அங்கு அழைத்துச் செல்கிறார்.

jallianwala baghஅமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலா பாக் நினைவுச் சின்னம்

உள்ளக்குமுறல்கள்

ஜாலியன்வாலா பாக் படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களை நினைக்கும்போதெல்லாம் தங்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்துகின்றனர். ஜாலியன்வாலா பாக்கில் சுடப்பட்ட லாலா ஹரி ராமின் பேரன் மகேஷ் பேகல், தனது பாட்டி ரத்தன் கௌர் தன்னிடம் பகிர்ந்துகொண்ட மோசமான நினைவுகளை நம்மிடம் வெளிப்படுத்துகிறார்.

“எனது தாத்தாவை நெஞ்சு மற்றும் காலில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுடன் வீட்டுக்கு கொண்டுவந்தபோது அவருக்கு கடுமையான ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது. அப்போது அமிர்தசரசு நகரில் நடந்த களேபரத்தில் மருத்துவ உதவிகூடக் கிடைக்கவில்லை. நான் என் தேசத்துக்காக இறக்கிறேன். என் மகன்களும் அதே பாதையைப் பின்பற்ற வேண்டும் என்பதே அவரது கடைசி வார்த்தைகள்,” என்கிறார் மகேஷ்.

என் தாத்தா மிகவும் விரும்பியதால் அவர் திரும்பி வந்ததும் உண்பதற்காக என் பாட்டி ‘கீர்’ ( அரிசியில் செய்யப்படும் இனிப்புச் சுவையுடைய தின்பண்டம்) சமைத்து வைத்திருந்தார். ஆனால், அதை என் தாத்தா உண்பதற்கான நேரம் வரவே இல்லை என்று கனத்த இதயத்துடன் கூறுகிறார் அவர்.

“அவரது இறப்பால் எங்கள் குடும்பம் மிகுந்த இன்னலுக்கு ஆளானது. அவர் விருப்பதைப்போலவே எங்கள் குடும்பம் அவர் மறைவுக்குப் பின்னும் அந்நிய ஆட்சியை எதிர்த்துப் போராடினோம். 1997இல் பிரிட்டன் ராணி எலிசபெத் இந்தியாவுக்கு வருகை தந்தபோது ‘தங்கள் தவறுகளுக்கு பரிகாரம் செய்யாமல் ராணி அமிர்தசரசுக்கு வருகை தருவது வீண்’ என்று பதாகைகளை ஏந்திக்கொண்டு போராடினோம்,” என்று மகேஷ் கூறுகிறார்.

jallianwala baghஜாலியன்வாலா பாக்கில் சுவரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த இடங்கள்

ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவத்தின் 100ஆம் ஆண்டு தொடங்குவதை அனுசரிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய அடையாள அட்டையை வைத்து சாலைகளில் சுங்கக் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்பதைத் தவிர்த்து சத்பால் சர்மா மற்றும் மகேஷ் பேகல் ஆகியோருக்கு அதை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.

எஸ்.கே.முகர்ஜீ நீண்ட நாட்களாக ஜாலியன்வாலா பாக்கை பராமரித்து வருகிறார். அவரது தாத்தா துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்தவர்களில் ஒருவர். ராணி எலிசபெத் மற்றும் அவரது கணவர் எடின்பர்க் கோமகனின் கையெழுத்தை ஜாலியன்வாலா பாக் வருகைப் பதிவேட்டில் காட்டும் அவர், “ஒரு மன்னிப்பு எந்த அளவுக்கு காயங்களை ஆற்றும் என்று தெரியாது. ஆனால், நாம் இந்த நினைவுச் சின்னத்தை மேம்படுத்தி, இந்தியாவின் கறுப்பு நாட்களை நினைவுகூர வேண்டும்,” என்கிறார். -BBC_Tamil

TAGS: