ரந்தாவ்வில் என்.ஜி.ஓ. மற்றும் பிஎச் ஆதரவாளர்கள் கைகலப்பு

ரந்தாவ் இடைத்தேர்தல் | இன்று, ரந்தாவ் பட்டணத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓர் அரசு சாரா அமைப்பைச் சார்ந்தவர்களுக்கும், பிஎச் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதப் பாடம் கற்றல் கற்பித்தல் (பி.பி.எஸ்.எம்.ஐ) கொள்கையை எதிர்க்கும் டி.எல்.பி. எதிர்ப்பு கூட்டணியின் (இருமொழி எதிர்ப்புக் குழு) சுமார் 10 உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

‘மகாதீர் தமிழ்ப்பள்ளிகளின் கருப்பு ஆடு’, ‘பி.பி.எஸ்.எம்.ஐ. திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்’, ‘தோக் மாட் தாய்மொழிக் கல்வியை ஆதரிக்கிறார், ஶ்ரீராம் வேலை பலுவில் இருக்கிறார்’ போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

அதுமட்டுமின்றி, ஏப்ரல் 13-ல் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், பிஎச் வேட்பாளர் டாக்டர் ஶ்ரீ ராமுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர்கள் ரந்தாவ் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த பிஎச் ஆதரவாளர்களுக்கும் டி.எல்.பி. எதிர்ப்பு குழுவிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. அதனை அடுத்து, அங்கு வந்த போலிசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

பி.பி.எஸ்.எம்.ஐ. திட்டம் மீண்டும் அமலுக்கு வரவிருப்பது குறித்து, தனது நிலைப்பாட்டைக் கூற விரும்பாத ஶ்ரீ ராமின் செய்கையில் தாங்கள் ஏமாற்றம் அடைந்ததாக டி.எல்.பி. எதிர்ப்பு குழுவிற்குத் தலைமையேற்றிருந்த தியாகு லோகநாதன் தெரிவித்தார்.

“பி.பி.எஸ்.எம்.ஐ. திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதில், ரந்தாவ் இடைத்தேர்தல் வேட்பாளர்களின் நிலைப்பாடு பற்றி தெரிந்துகொள்ள நாங்கள் ரந்தாவ் வந்தோம்.

“நாங்கள் பிஎன் வேட்பாளர், முகமட் ஹசானைச் சந்தித்தோம், அவர் தாய்மொழிக் கல்வியை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

“ஆனால், ஶ்ரீ ராம் தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் பிஸியாக இருப்பதாகக் கூறி, எங்களைச் சந்திக்க மறுத்துவிட்டார். எனவே, இந்த இடைத்தேர்தலில், மக்கள் ஶ்ரீ ராமை நிராகரிக்க வேண்டும் என நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம்,” என அவர் மலேசியாகினிக்கு விளக்கினார்.

எனினும், பிகேஆர் முன்னாள் துணைச் செயலாளர் பி ஜனபாலா, அக்குழுவினரின் செயல்கள் ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது என்றும், அவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு நோக்கம் உண்டு என்றும் கூறினார்.

“இடைத் தேர்தலில் இன்னும் வெற்றிபெறாத ஶ்ரீ ராமுக்கும் பி.பி.எஸ்.எம்.ஐ.-க்கும் என்ன தொடர்பு என்று கேட்டதற்கு, அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால், அது அவர்களின் உரிமை என்று கூறுகின்றனர்.

“போராட்டம் நடத்தும் அவர்களின் உரிமையை நான் மதிக்கிறேன். ஆனால், போராட்டத்தில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். பி.பி.எஸ்.எம்.ஐ. மத்திய அரசின் பிரச்சினை. கேள்விகள் இருந்தால், பிரதமர், கல்வி அமைச்சர் அல்லது மற்ற இந்திய அமைச்சர்களிடம் கேட்க வேண்டும். இதற்கும் ஶ்ரீ ராமுக்கும் என்ன தொடர்பு?

“ரந்தாவ் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், அவரை நாம் அமைச்சரவைக்கு அனுப்பப் போவதும் இல்லை,” என்றார் ஜனபாலா.