பிரேசிலில் கனமழை, வெள்ளத்துக்கு 9 பேர் பலி!

பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த இரு தினங்களாக இடைவிடாத கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 9 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. 24 மணி நேரத்தில் மட்டும் 31 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது.

இதனால் அந்த நகரம் வெள்ளக்காடாகி இருக்கிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன. சாலைகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

மழையின் போது பலத்த காற்று வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மின் இணைப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்டவையும் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 9 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் துரித கதியில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-athirvu.in