உலகளாவிய பத்திரிகை புலனாய்வுத் துறை மீது யுத்த சமிக்ஞையை ஏற்படுத்தியுள்ள அசாஞ்சேயின் கைது!

சமீபத்தில் சர்வதேச சட்ட திட்டங்களை விக்கி லீக்ஸ் இணையத் தள தாபகர் ஜூலியன் அசாஞ்சே மீறி வருகின்றார் என்ற ஒரு காரணத்தைக் காட்டி ஈக்குவடார் நாடு கடந்த 7 ஆண்டுகளாக அவருக்கு அளித்த தஞ்சத்தை திரும்பப் பெற்றது.

இதை அடுத்து லண்டனில் உள்ள ஈக்குவடார் தூதரகத்துக்குள் நுழைந்து அசாஞ்சேயை கைது செய்துள்ளது இலண்டன் போலிஸ்.

2012 ஆமாண்டு பிடிவாரண்டு பிறப்பிக்க பட்ட போதும் இவர் மீதான விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாத குற்றச்சாட்டின் பேரில் அசாஞ்சேயைக் கைது செய்துள்ள இலண்டன் போலிஸ் எதிர் வரும் மே 2 ஆம் திகதி இவரை வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜராக்க உள்ளது. இதன் போது அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று ஊகிக்கப் படும் அதேவேளை இன்னொரு பக்கம் அவரை நாடுகடத்துவதில் அமெரிக்கா மும்முரமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜுலியன் அசாஞ்சேயின் கைதானது உலகளாவிய பத்திரிகைப் புலனாய்வுத் துறை மீதான வல்லரசுகளின் போர் சமிக்ஞையை ஏற்படுத்தியிருப்பதாக நோக்கப் படுகின்றது. மேலும் இக்கைது நடவடிக்கை, அசாஞ்சே இற்கும் அவரது விக்கிலீக்ஸ் ஊடகத்துக்கும் அளிக்கும் செய்தியாக ‘நீங்கள் யாரைப் பற்றி வேண்டுமானாலும் விமரிசியுங்கள். ஆனால் பூகோள வல்லரசுகள் மீதல்ல.’ என்பதாகும் என்றும் கருதப் படுகின்றது.

விக்கிலீக்ஸில் கசிந்த உலகளாவிய மற்றும் அமெரிக்க இராணுவ மற்றும் அரசியல் சம்பந்தமான இரகசிய செய்திகளில், முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் அணுகுமுறை நிதியமைச்சர்களாக இருந்த பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் வரையில் அடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது போர் தொடுத்தது தொடர்பிலும், அமெரிக்காவின் இராஜ தந்திர நடவடிக்கைகள் தொடர்பிலும் விக்கிலீக்ஸ் இணையத் தளத்தில் 2010 ஆமாண்டு தகவல் கசிந்த போது அமெரிக்காவினால் மிகவும் தேடப் படும் நபரானார் அசாஞ்சே. விசாரணை என்ற பெயரில் கைதாகி மரண தண்டனைக்கு உள்ளாகுவதில் இருந்து தப்பிக்கவே நாட்டை விட்டு வெளியேறிய அசாஞ்சே அண்மைக் காலம் வரை இலண்டனிலுள்ள ஈக்குவடோர் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-4tamilmedia.com