‘சீனாவையே எதிர்க்கத் துணிந்தவர்’ – மகாதிருக்கு அமெரிக்கப் பேராசிரியர் புகழாரம்

உலகின் மற்ற தலைவர்கள் சீனாவிடம் பணிந்துபோன நிலையில் அதை எதிர்த்து நிற்கத் துணிந்தவர் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் என்று பொருளாதார நிபுணர் பானோஸ் மூர்டுகோடாஸ் பாராட்டியுள்ளார்.

கிழக்குக்கரை இரயில் திட்டத்துக்கு(இசிஆர்எல்) ஆகும் செலவை ரிம65 பில்லியனிலிருந்து ரிம44 பில்லியனாகக் குறைப்பதில் புத்ரா ஜெயா அடைந்த வெற்றியைக் குறிப்பிட்டுத்தான் அவர் அவ்வாறு பாராட்டினார்.

“சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கட்டமைப்புத் திட்டங்கள் பொருளாதாரப் பயன் தரக்கூடியவை அல்ல. பெரும் பணச் செலவில் மேற்கொள்ளப்படும் அத்திட்டங்கள் நாடுகளை பெய்ஜிங்கிடம் கடனாளி ஆக்கி விடுகின்றன.

“இப்படிப்பட்ட கடன் வலையில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க விரும்பினார் பிரதமர் மகாதிர் முகம்மட். அதனால் கிழக்குகரை இரயில் திட்டத்தை இரத்துச் செய்வதாக கடந்த ஆகஸ்டில் அறிவித்தார். அப்படிச் செய்தது சீனாவை அத்திட்டம் குறித்து பேரம்பேசும் நிலைக்கு மீண்டும் இழுத்துக் கொண்டு வந்தது.

“அதில் அவர் வெற்றியும் பெற்றார். அத்திட்டத்துக்கான செலவு கணிசமாகக் குறைக்கப்பட்டு புதிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதே அதற்குச் சான்று”, என நியு யோர்க், புரூக்வில்லில் உள்ள லோங் ஐலண்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறைத் தலைவரும் பேராசிரியருமான மூர்டுகோடாஸ் ஃபோர்பஸ் சஞ்சிகையில் எழுதியுள்ளார்.

மலேசியாவுடன் ஒப்பிடும்போது ஸ்ரீலங்கா மேற்கொண்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், கொழும்பு துறைமுக நகர் திட்டம், மட்டாலா ராஜபக்‌ஷா அனைத்துலக விமான நிலையம் ஆகியவை அந்நாட்டைப் பெரும் கடனாளியாக்கியுள்ளது என்றாரவர்.

அதேபோல் பிலிப்பின்சும் பாகிஸ்தானும்கூட சீனாவின் உதவியுடன் பெரும் பொருள்செலவில் திட்டங்களை மேற்கொண்டுவிட்டு இப்போது அவதிப்படுகின்றன.

“ஸ்ரீலங்காவுக்கு ஏற்பட்டதுபோன்ற நிலை தங்கள் நாடுகளுக்கு ஏற்படாதிருக்க மகாதிரைப் போல் செயல்படும் துணிச்சல் பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே -க்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் உண்டா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்”, என்று மூர்டுகோஸ் கூறினார்.