தமிழகம் பாலை நிலமாக மாறுமா? செய்ய தவறியதும், செய்ய வேண்டியதும் – திணைகளின் கதை

தேர்தல் குறித்து மக்கள் மனநிலை குறித்து அறிய இந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்ந்தெடுத்து பிபிசி தமிழ் பயணித்தது.

மலைகளுக்கு வாக்கு இயந்திரங்களை கழுதையில் எடுத்து செல்லும் சின்னராஜ், தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கும் சிற்றூர் (குறிஞ்சி), வாழ்வாதாரத்திற்காக சிறுநீரகத்தை விற்கும் மக்கள் (மருதம்), பூச்சிக் கொல்லியால் இறந்த விவசாயி குடும்பத்தினர் (முல்லை), உப்பு உற்பத்தியாளர்களின் துயரம் (நெய்தல்), பாலை நிலம் குறித்து உரையாட செயற்பாட்டாளர் நக்கீரன் என பலரை சந்தித்தோம்.

அதன் தொகுப்பு இது.

குறிஞ்சி திணை:மக்களவை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கும் ஒரு மலை கிராமம்

முல்லைதிணை:‘இதுதான் எங்கள் விதியோ’ – பூச்சி கொல்லி தெளித்து விவசாயி மரணம்: யார் பொறுப்பு?

மருதம் திணை:‘சிறுநீரக விற்பனை, வாடகைத் தாய்’ – மருத நில மனிதர்களின் துயர்மிகு கதை

நெய்தல் திணை:குஜராத் சரக்கால் பாதிப்பு: உப்பிட்டவர்களின் சுவையற்ற வாழ்வு


திணை : பாலை

தமிழ்நாட்டில் இயல்பாக பாலை நிலம் என்று எதுவும் இல்லை. குறிஞ்சி மற்றும் முல்லை தன் இயல்பை இழந்துவிடுவது பாலை என்கிறது இலக்கியம். தனித்த பாலை நிலம் என்று நம்மிடம் எதுவும் இல்லை. ஆனால், தற்போதைய சூழல் தமிழகத்தில் தொடர்ந்தால், இங்கு பாலை நிலம் நிரந்தரமாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் நக்கீரன்.

நிலத்தடி நீர்

நக்கீரன்

மேலும் நக்கீரன், “நம்முடைய மழை பொழிவையும், நம் நிலத்தின் இயல்பையும் நாம் இன்னும் கவனிக்கவே தொடங்கவில்லை. ஒட்டு மொத்த தமிழ் நிலப்பரப்பில் 27 விழுக்காடு மட்டும்தான் தண்ணீரை உள்ளிழுக்கும் திறன் கொண்ட நிலப்பரப்பு. மீதமுள்ள 73 விழுக்காடு நிலம் என்பது அடிப்பகுதியில் பாறைகளை கொண்ட நிலம்.” என்கிறார்.

“இந்த 27 சதவீத நிலத்தில் மட்டும்தான் தண்ணீரை சேமிக்க முடியும் என்கிற நிலை உள்ளது. இந்த 27 சதவீத நிலமும் 17 ஆற்றுப் படுகைகளில் அமைந்துள்ளது. இந்த அடிப்படையை புரிந்து கொள்ளாமல் எல்லா இடங்களிலும் நாம் நிலத்தடி நீரை உறிஞ்சியதால் எல்லா பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.” என்று பாலை நிலம் குறித்த உரையாடலில் நக்கீரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

திணை தன்மை

“குறிஞ்சி நிலத்தில் பெய்யும் மழை, அதாவது மலைப்பகுதியில் பெய்யும் மலை, அங்கிருந்து ஓடி முல்லை நிலத்திற்கு வருகிறது. அங்கிருந்து மருதத்திற்கு பயணித்து, நெய்தலில் தன் ஓட்டத்தை நிறுத்துகிறது. அப்படி ஒரு ஆறு உருவாகி ஓடி வரும் போது, இங்கு முதல் சிக்கல் எங்கு தொடங்கி இருக்கிறதென்றால் குறிஞ்சி நிலத்தில். குறிஞ்சி நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட காட்டழிப்பால், மலைகள் தண்ணீரை சேமிக்கும் திறனை இழந்துவிட்டன” என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் நக்கீரன்.

பாலை நிலமாகுமா தமிழகம்?

அவர், “காடுகளில் குறிப்பாக சோலை காடுகளை எடுத்துக் கொண்டொமானால், சோலை காடுகளின் மிக முக்கிய பலன் என்னவென்றால், அந்த காடுகளும் அதன் புல்வெளிகளும் ஒரு முறை பெய்யும் மழையை இழுத்து வைத்துக் கொள்ளும் இயல்புடையவை. குறிப்பாக அந்த புற்களுடைய வேர் பகுதி தண்ணீரை பஞ்சுபோல் உறிஞ்சி வைத்து கொண்டு ஒட்டுமொத்தமாக வெளியே விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக கசியவிடும். இதன் காரணமாகதான் முன்பெல்லாம் கோடையில் கூட ஆற்றில் நீர் ஓடியது. இன்று சோலை காடை அழித்து பல்வேறு திட்டங்களை கொண்டுவந்ததால் தண்ணீர் சேமிப்பை திறனை இழந்துவிட்டோம். இதன் காரணமாக ஒரு பெருமழை பெய்தால் அது வெள்ளமாக மாறி கடலில் கலக்கிறது ” என்று விளக்குகிறார் நக்கீரன்.

நக்கீரன், “முல்லை நிலம் என்று குறிப்பிடப்படும் தமிழகத்தின் பெரும் நிலப்பகுதி பாறைகளாக உள்ளது. அந்த இடத்தில் இயற்கையாகவே நிலத்தடியில் தண்ணீரை சேமித்து வைத்திருந்தது. அது பெட்ரோலிய இருப்பு போல,அதில் கை வைத்தால் தீர்ந்து போகும், மீண்டும் தண்ணீர் ஊர பல்லாயிரகணக்கான ஆண்டுகள் ஆகும் என்பதை உணர மறந்து, அந்த தண்ணீரை எடுத்து பயன்படுத்த தொடங்கினோம். இதனால் அந்த நிலத்தில் மேல் பகுதியில் இருந்த தண்ணீரும் குறைந்தது” என்கிறார்.

“அடுத்து மருத நிலம். மருத நிலம் இயல்பாகவே தண்ணீர் வளமிக்க இடம். அந்த நிலத்திற்கு சம்பந்தமில்லாத திட்டங்களை தீட்டி நிலத்தை மாசுப்படுடத்திவிட்டோம். இந்த பிழைகள் எல்லாம் ஒன்றாக ஒரு நிலப்பரப்பை பாலையாக மாற்றிக் கொண்டிருக்கிறது.”

பாலையாகும் நிலம்

நிலத்தடி நீர் காலியாவதால் மட்டும் ஒரு நிலப்பரப்பு பாலை ஆகிறது என்று சொல்ல முடியாது. நீர் சுழற்சி கெட்டதால்தான் நிலைமை மோசமடைந்தது என்கிறார் நக்கீரன்.

இது குறித்து விளக்கும் அவர், “தண்ணீரை அடிப்படையாக வண்ணங்களில் மூன்றாக பிரிப்போம். ஒன்று நீல நீர், பச்சை நீர் மற்றும் சாம்பல் நீர். நீல நீரும், பச்சை நீரும் என்னவென்றால் நீர் நிலைகளில் இருக்கும் நீரும், வான் வெளியில் மழை மேகங்களாக இருக்கும் நீரும். இந்த இரண்டு நீரும் மாறி மாறி நீர் சுழற்சிக்கு உட்பட்டு இருந்தபோது, இங்கு பெரிய நீர் தட்டுப்பாடு எதுவும் கிடையாது. ஆனால், அதே சமயம் நிலத்தடி நீர் கழிவு நீரை கலந்ததால், இது நீர் சுழற்சியில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.” என்கிறார்.

இதில் கவனல் செலுத்த தவறினால் ஓரு பெரும் நிலப்பரப்பு பாலையாக மாறும் என்கிறார் நக்கீரன். -BBC_Tamil

TAGS: