இந்திய வரலாற்றில் இடம் பிடித்த வேலூர் லோக்சபா தொகுதி.. தமிழகத்திற்கு மற்றொரு அவமானம்

டெல்லி: சுதந்திர இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பணப்பட்டுவாடா புகாருக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்ட லோக்சபா தொகுதி என்ற பெயரை வேலூர் பெற்றுள்ளது.

கடந்த மார்ச் 30ஆம் தேதி, திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திலும், அவருக்கு நெருக்கமானவர்கள் இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் துரைமுருகன் வீட்டிலிருந்து 10.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. திமுக பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் குடோனில் இருந்து சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

குடியரசு தலைவர்

வேலூர் தொகுதியில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில், இவ்வாறு பணம் பறிமுதல் செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஒரு பரிந்துரை அனுப்பப்பட்டது. அதில் பெரும் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதால், வேலூர் லோக்சபா தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

முதல் தொகுதி

இந்த நிலையில்தான் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அறிவித்துள்ளார். அந்த வகையில் பணப் பட்டுவாடா புகாருக்காக சுதந்திர இந்தியாவில் தேர்தல் ரத்து செய்யப்படும் முதல் லோக்சபா தொகுதி என்ற பெயரை, அதாவது கெட்ட பெயரை வேலூர் ஈட்டியுள்ளது.

ராஜ்யசபா

இதற்கு முன்பாக 2012ஆம் ஆண்டில் ஜார்க்கண்டில் இரு ராஜ்யசபா தொகுதிக்கான தேர்தல் இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் பணப்பட்டுவாடாவிற்காக, தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுதான் முதல்முறை, என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டசபை

2017ஆம் ஆண்டில் டிடிவி தினகரன் சென்னை ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்டபோது பெருமளவில் பணம் விநியோகம் செய்ததாகக் கூறி, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 2016ஆம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தலின்போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் அதிமுகவினர் பெருமளவில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகக் கருதிய தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதிகளில் தேர்தலை ரத்துசெய்தது. இவ்வாறு பணப்பட்டுவாடாவிற்காக தமிழகத்தில் தேர்தல்கள் ரத்து செய்யப்படுவதால், தேசிய அளவில் தமிழகத்திற்கு அவப்பெயர் கிடைத்து வருகிறது.

tamil.oneindia.com

TAGS: