‘காட்டில் முகாம்கள் இருப்பதைக் கண்டேன்’- வாங் கெட்லியான் ஆர்சிஐ-இல் போலீஸ் அதிகாரி தகவல்

வாங் கெலியான் சவக்குழிகள் மீதான அரச விசாரணை ஆணையத்தின் பொதுச் செவிமடுப்பு இன்று தொடங்கியது. அதில் முதன்முதலாக சாட்சியளித்த போலீஸ் கார்ப்பரல் மாட் டென் 2015, ஜனவரி 18-இல், தாய்- மலேசிய- தாய் எல்லையில் உள்ள காட்டுப் பகுதிகளில் ஆள் கடத்தலுக்குப் பயன்படும் முகாம்கள் இருப்பதைக் கண்டது பற்றி விவரித்தார்.

போலீஸ் பொது நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த அவர், தன் சகாவுடன் காட்டுப் பகுதியில் காவல் சுற்றில் ஈடுபட்டிருந்தபோது காட்டுக்குள் வழித் தடங்கள் செல்வதையும் மரங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருப்பதையும் கண்டதாகத் தெரிவித்தார்.

மறுநாள், ஜனவரி 19, காலையில் தடங்களைப் பின்பற்றிக் காட்டுக்குள் சென்றார். அடர்ந்த காட்டுக்குள் மக்களையும் அவர்கள் தங்குவதற்கு முகாம்கள், மரத்தால் அமைக்கப்பட்ட வீடுகளும் இருப்பதையும் கண்டார். கண்டதை மேலதிகாரிகளிடம் அப்படியே எடுத்துரைத்தார்.

அன்று மாலை மாட் ஒன்பது போலீஸ் வீரர்களுடன் அப்பகுதிக்குச் சென்றார். இவர்கள் அங்கு வந்தது உடனே தெரிந்து விட்டது.

முகாமில் இருந்த ஒரு பெண், “போலீஸ் சம்பாய்”, என்று சத்தமிட்டார்.

“இப்படித்தான் அங்கு மக்கள் இருப்பது தெரியவந்தது. ஆனால், அவர்கள் (தப்பியோடும் முயற்சியில்) எல்லாவற்றையும் உடைத்தெறிந்து விட்டார்கள்”, என்று மாட் கூறினார்.

தப்பி ஓடியவர்களைப் பிடிக்க முடிக்கவில்லை என்றும் ஆனால் காயம் பட்டிருந்ததால் தப்பியோட முடியாத ஆறு வெளிநாட்டவரைப் பிடித்தோம். அவர்கள் சுற்றிலும் வேலி போடப்பட்ட ஒரு வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரிக்கவில்லை என்றும் அனைவரும் வாங் கெலியான் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் அவர் சொன்னார்.

அரச விசாரணை ஆணையத்துக்கு முன்னாள் தலைமை நீதிபதி அரிப்பின் ஜக்கரியா தலைமை தாங்குகிறார். அவருக்கு உதவியாக முன்னாள் போலீஸ் படைத் தலைவர் நோரியான் மாயும் மேலும் ஐந்து ஆணையர்களும் உள்ளனர்.