சொங்ரான் கொண்டாட்டத்தில் பேராக் அரசு தலையிடாது

பெங்காலான் ஹுலுவில், அங்குள்ள சயாமிய வம்சாவளியினர் ஆண்டுதோறும் கொண்டாடும் சொங்ரான் விழாவில் பேராக் அரசு தலையிட முடியாது என இன்று மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அது தென் தாய்லாந்தின் யாலா மாநிலத்தையொட்டியுள்ள பெத்தோங்வாழ் சயாமியர்களின் கலாச்சார விழாவாகும். அவர்களின் புத்தாண்டைக் குறிக்கும் அவ்விழாவில் ஒருவர் முகத்தில் ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவியும் ஒருவர்மீது ஒருவர் நீர் ஊற்றியும் கொண்டாடுவார்கள். அது சுற்றுப்பயணிகளைக் கவரும் ஒரு நிகழ்வாகவும் அமைந்துள்ளது என மாநில சுற்றுலா, கலை, கலாச்சாரக்குழுத் தலைவரான டான் கார் ஹிங் கூறினார்.

“சொங்ரான் கொண்டாட்டம் மற்றவர்களின் உணர்வுகளைப் பாதிக்காமலிருப்பதற்காக அதை மாநில அரசு கண்காணிக்கும்”, என்றும் அவர் சொன்னார்.

சொங்ரான் விழாவால் முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்திருப்பதால் அதற்கெதிராக மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பிய ரஸ்மான் ஜக்கரியா(பாஸ்- செமாங்கோல்)-வுக்குப் பதிலளித்தபோது டான் இவ்வாறு சொன்னார்.