டிஏபி-யைக் கலைத்துவிட்டு பெர்சத்துவில் சேர்ந்து விடலாம்: முன்னாள் டிஏபி உறுப்பினர் காட்டம்

டிஏபி தலைவர்கள் கட்சி உறுப்பினர்களைச் சந்திக்கும் கூட்டமொன்று விரைவில் நடைபெறவுள்ள வேளையில், அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் டிஏபியைக் கலைத்துவிட்டு எல்லாரும் பெர்சத்துக் கட்சியில் இணைவது மேல் எனக் கூறியுள்ளார்.

ஏனென்றால்,, டிஏபி கர்ப்பால் உயிருடனிருந்தபோது கடைப்பிடித்த கொள்கையை இப்போது கடைப்பிடிப்பதில்லையாம். அந்த ஆத்திரம்தான் சட்ட விரிவுரையாளர் ஷாம்ஷேர் சிங் திண்ட்டை அப்படிப் பேச வைத்துள்ளது.

“கர்ப்பால் ஹுடுட் சட்டத்தை எதிர்த்தார், கட்சித் தாவலை எதிர்த்தார். அதுதான் கட்சியின் கொள்கையாக இருந்தது.

“கட்சித் தாவி வருவோருடன் சேர்ந்து கூட்டரசு அரசாங்கத்தைக் கைப்பற்றும் அன்வாரின் திட்டத்துக்கு டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும் ஆதரவு தெரிவித்தபோது அவர்களைக் கடிந்து கொண்ட கர்ப்பால் இருவரும் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்”, என ஷாம்ஷேர் ஓர் அறிக்கையில் கூறினார்.

“ஹுடுட் சட்டத்தைக் கொண்டுவரத் திட்டமிட்ட பாஸுடன் உறவுகளை முறித்துக்கொண்ட டிஏபி, பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அம்னோ எம்பிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் பெர்சத்துவில் சேர்வதை வரவேற்றபோது ஏன் பெர்சத்துடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ளவில்லை?”, என்றவர் வினவினார்.

டிஏபி தலைவர்களும் அமைச்சர்களும் ஏப்ரல் 27-இல் பினாங்கு தீவிலும் மறுநாள் தலைநிலத்திலும் டிஏபி உறுப்பினர்களைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதுபோன்ற கூட்டங்களில் மனத்தில் பட்டதைத் துணிச்சலுடன் பேசும் வழக்கத்தைக் கொண்டிருந்தவர் ஷம்ஷேர். அவருக்கு டிஏபி மகாதிருடன் கைகோத்தது பிடிக்கவில்லை. வெறுத்துப்போய் கட்சியிலிருந்து விலகினார்.