மெட்ரிகுலெஷன்: பூமிபுத்ரா-அல்லாதாருக்கு 7,000 இடங்களை உருவாக்குங்கள்

டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பல்கலைக்கழகத்துக்கு முந்திய மெட்ரிகுலெஷன் கல்வித் திட்டத்தைச் சில தரப்பினர் அரசியலாக்குவதை நிறுத்திக் கொண்டு அதற்குத் தக்கதொரு தீர்வைக் காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சில தரப்பினர் இந்த விவகாரத்தை அரசியலாக்கி பூமிபுத்ரா- அல்லாதாருக்கு 10 விழுக்காடு இடங்களுக்குமேல் ஒதுக்கினால் அது மலாய்க்காரர்களுக்கு ஓர் இழப்பாகும் என்ற தோற்றத்தை உருவாக்க முனைகிறார்கள் என்று பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சதீஷ் கூறினார்.

“அவர்கள் இப்போதைய அரசாங்கம் பூமிபுத்ரா உரிமைகளைப் புறக்கணிப்பதாகக் கதைகட்டிவிட முனைகிறார்கள்”, என்றாரவர்.

இவ்வளவுக்கும் 25,000 மெட்ரிகுலெஷன் இடங்களில் பூமிபுத்ரா மாணவர்களுக்காக 90 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அவை எல்லாமே நிரப்பப்படுவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும் என்றவர் மலேசியாகினியிடம் கூறினார்.

இதற்கு என்னதான் தீர்வு?

அரசாங்கம் மெட்ரிகுலெஷன் கல்விக்காக உள்ள 25,000 இடங்களையும் பூமிபுத்ராக்களுக்கே ஒதுக்கிவிட்டு, “எஸ்பிஎம்-மில் சிறப்பாகத் தேர்ச்சிபெறும் பூமிபுத்ரா- அல்லாத மாணவர்களுக்காக மேலும் 7,000 இடங்களை உருவாக்க வேண்டும்.

“அந்த இடங்களுக்கு பூமிபுத்ரா- அல்லாத மாணவர்கள் அவர்களுக்குள் போட்டி போட்டுக் கொள்ளட்டும். திறமையின் அடிப்படையில் மட்டுமே அந்த இடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

“இதுவே, இதற்கான தீர்வு”, என்று சதீஷ் கூறினார்.