மலாய்க்காரர் உரிமைக்காக போராடுவது இனவாதமல்ல: பெர்சத்து வலியுறுத்து

பெர்சத்து மலாய்க்காரர் உரிமைகளைத் தற்காப்பதற்காக அதை அம்னோவுடன் ஒப்பிடுவதோ இனவாதக் கட்சி என்று முத்திரை குத்துவதோ கூடாது என அதன் தலைமைச் செயலாளர் மர்சுகி யாஹ்யா கூறினார்.

இரண்டு கட்சிகளுக்கும் அடிப்படையில் பெருத்த வேறுபாடு உண்டு என்று கூறியவர் பெர்சத்து ஊழலை வெறுக்கிறது, ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைவரை அது ஆதரிப்பதில்லை என்றார்.

“ஊழலை, வேண்டப்பட்டவர்களுக்குச் சலுகை காட்டுவதை, பணம் கொள்ளையடிப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். மலாய்க்காரர் உரிமைக்காக போராடுவதால் இனவாதிகள் ஆகிவிட மாட்டோம். எல்லா மலேசியர்களின் உரிமைக்காகவும்தான் போராடுகிறோம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

பெர்சத்து, மெட்ரிகுலெஷன் இடங்களில் 90 விழுக்காடு மலாய்க்காரர்களுக்கு 10 விழுக்காடு மலாய்க்காரர்- அல்லாதாருக்கு என்ற முந்தைய அரசாங்கத்தின் கொள்கையை ஆதரிப்பதற்காக பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி அதைக் குறைகூறியிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது மர்சுகி இவ்வாறு கூறினார்.

இராமசாமிக்கு அவருடைய கருத்தைச் சொல்லும் உரிமை உண்டு, ஆனால் அவர் பெர்சத்துக் கொள்கை குறித்துக் கேள்வி எழுப்பக்கூடாது, பெர்சத்து டிஏபி பற்றிப் பேசுவதில்லை என்று துணை உள்துறை அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.

இராமசாமி அறிக்கை விடுவதற்குமுன் நிதானிக்க வேண்டும். அறிக்கை விடுவது ஹரப்பான் பங்காளிக்கட்சிகளின் உறவைப் பாதிக்கும் என்று மர்சுகி கூறினார்.

இதன் தொடர்பில் இராமசாமியைத் தொடர்புகொண்டதற்கு அவர் கருத்துரைக்க மறுத்து இன்று மெட்ரிகுலெஷன் விவகாரம் குறித்து புத்ரா ஜெயாவில் பேச்சு நடப்பதாகவும் அதன் முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் சொன்னார்.