உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் தஞ்சோங் மாலிம் வட்டாரத்தில் தமிழர் தேசியப் பட்டறை

கடந்த 28, ஏப்ரல்  ஞாயிறுக்கிழமை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் தஞ்சோங் மாலிம் வட்டார பொறுப்பாளர்களான திரு. தனசீலன், திரு. கோபால், தோழர் முருகன் மற்றும் தோழர் மைத்திரேயர் தலைமையில் தமிழர் தேசியப் பட்டறை (10) மிகச் சிறப்பாக  நடைபெற்றது.

காலை 9 முதல் மாலை 5 வரை இலவசமாக நடத்தப்பட்ட இப்பட்டறையை பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்கத்தை சார்ந்த தமிழ் ஆய்வாளர்களும் தமிழிய சிந்தனையாளர்களுமான திரு முருகையன் திரு தமிழ்ச்செல்வம் மற்றும் திரு பாலமுரளி ஆகியோர்கள் மிக நேர்த்தியாக வழி நடத்தினார்கள்.

மலேசிய தமிழர்கள் தமிழர் தேசிய சிந்தனையை உணர்ந்து, அதன் வழிதட பாதையில் பயணித்து தமிழர் இனத்தின் முழு விடுதலையை  இலக்காக கொள்ளவே இந்த தமிழர் தேசிய உச்செய்திகளை 6 கூறுகளாக பிரித்து, வகுத்து, கட்டமைத்து எளிய முறையில் அனைவருக்கும் புரியும் வகையில் தக்க தரவுகளுடன் ஒளிப்படமாகவும் காணொளிகளாகவும் படைத்தனர்.

முதலாவதாக “தமிழர் தேசம்” என்ற தலைப்பில் தொன்மை உலகம், குமரிகண்டம்,  சேர சோழ பாண்டிய நாடுகள், சோழ பேரரசு தேசங்கள், தமிழர் நாடு, தமிழ் ஈழம், தமிழாய்ந்த தமிழரின் தலைமை மற்றும் தமிழருக்கான நாடு பற்றியவை துல்லியமாகவும்,

“தமிழ்” எனும் கூற்றில் மொழி தோற்றம், தமிழ் மொழி தோற்றம், தமிழின் தொன்மை, உலகின் மூத்த மொழி தமிழ், தமிழ் எண்கள், தமிழ்க் கல்வி, தூயத் தமிழ் மற்றும் தொல்காப்பியம் சான்று  தகவல்களை தெளிவாகவும் போதிக்கப் பட்டது.

“தமிழினம்” என்ற தலைப்பில் மனித இனம், தமிழின தோற்றம், தமிழினம், தமிழர், தமிழர்களே உலகத்தின் மூத்தக்குடி, உலகின் தொல் நாகரீகம் தமிழருடையது, தமிழ் மொழி வழி தமிழர் மற்றும் முன்னோர்கள் பற்றி விளக்கமாகவும், “தமிழர் பண்பாடு” எனும் அடையாளத்தில் பண்பாட்டு கூறுகள், கலைகள், ஓகம், சமையல், உடை, வாழ்வியல், தமிழர் மரபு வழி பண்பாடு மற்றும் தமிழர் பண்பாட்டுக் களஞ்சியம் போன்றவை விரிவாகவும் வழங்கப்பட்டது.

“தமிழர் சமயம்” என்ற கூற்றில் மரபு சார் வழிபாடு, ஐந்தினை தெய்வங்கள், சைவம், ஆசிவாகம், பெளத்தம், வைதிகம், கிறித்துவம், இசுலாம், சன்மார்க்கம், அறம் சார்ந்த நம்பிக்கை மற்றும் திருக்குறள் வழி போன்ற தெளிவுகளும் “தமிழர் பெருநாட்கள்” எனும் தலைப்பில் பொங்கல், தமிழர் புத்தாண்டு, தமிழ் மொழிப்போர் ஈகியர்கள் நாள், தென்புலத்தார் நாள், திருக்கூட்ட மரபினர் நாள், மாவீரர் நாள், தமிழர் நாள்காட்டி, மற்றும் ஐந்திறம் போன்ற எண்ணிலடங்காத தமிழர்களின் நுட்பமான  மீட்சி வீழ்ச்சி செய்திகளை வரையறைக்கப்பட்டு படைக்கப் பட்டது.

கலந்து கொண்ட 30-கும் மேற்பட்ட வட்டார தமிழர்களுக்கு பட்டறையின் முடிவில் சான்றிதழ்  வழங்கப்பட்டதுடன் அவர்களின் கருத்தினைகளை  காணோளிப் பதிவாகவும் செய்யப்பட்டது.

இப்பட்டறை ஆதரவாளர்களான திரு செல்வகுமாரன் திரு இராவணன் திரு சத்தியமூர்த்தி திரு தமிழ்ச் செல்வம் ஆகியோர் உடனிருந்து குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வளரும் இளைய தமிழர் தலைமுறையினருக்கு தமது இனம், மொழி, சமயம், பண்பாடு, மரபு, தொன்மை, வரலாறு, வாழ்வியல், கல்வி, அறிவியல், உரிமை, உடமை போன்ற அடித்தள மீட்சி சிந்தனையை உருவாக்க, இதுபோன்ற தமிழர் தேசிய  பட்டறைகளை நாடு முழுவதும் முன்னெடுத்து வருவதாக இப்பட்டறையின் ஏற்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளரும் உலகத்தமிழர் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் செயல் பிரிவு பொறுப்பாளருமான  திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

தங்களது வட்டாரங்களில் தமிழர் தேசியப் பட்டறை நடத்த விரும்புவோர் தொடர்புக்கு : 0143099379