கன்னியாகுமரியில் 45,000 வாக்காளர்கள் நீக்கம்… தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: கன்னியாகுமரியில் 45,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த மக்களவை தேர்தலின் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆயிரம் வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வாக்களிக்க முடியவில்லை என்றும் குற்றம்சாட்டினார்கள். இதன் காரணமாக தேர்தல் அன்று குமரி மாவட்டத்தின் கடற்கரை பகுதி மீனவ கிராமங்களில் போராட்டங்களும் நடந்தது.

இந்நிலையில் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் திடீரென சுமார் 45 ஆயிரம் வாக்காளர்கள் கன்னியாக்குமரி மாவட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக மீனவர் அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

அந்த அமைப்பு தனது மனுவில், வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மையினர் அதிகம்பேர் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது. மேலும் வாக்ககாளர்கள் நீக்கம் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தி உள்ளது.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் 4 வார காலத்திற்குள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் ஒத்தி வைத்தது.

tamil.oneindia.com

TAGS: