நஜிப், ரோஸ்மாவுக்கு சிலாங்கூர் கொடுத்த டத்தோ ஸ்ரீ பட்டங்கள் தற்காலிகமாக இரத்து

சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா, முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரின் மனைவி ரோஸ்மா மன்சூர் ஆகியோருக்கு வழங்கிய பட்டங்களை அவர்களின் நீதிமன்ற வழக்குகள் முடியும்வரை தற்காலிகமாக இரத்துச் செய்துள்ளார்.

மே 6 தொடங்கி அந்தத் தற்காலிக இரத்து அமலுக்கு வருவதாக சுல்தானின் செயலாளர் முகம்மட் அமின் அஹமட் அஹ் அஹ்யா இன்று பிற்பகல் ஓர் அறிக்கையில் கூறினார்.

நஜிப்புக்கு 2004-இல் டத்தோ ஸ்ரீ பட்டத்துடன் கூடிய Darjah Kebesaran Seri Paduka Mahkota Selangor (S.P.M.S.) Kelas Pertama விருது வழங்கப்பட்டது.

அதற்கு முன் 1992-இல் அவருக்கு Dato’ Paduka Mahkota Selangor (D.P.M.S.) Kelas Kedua விருது வழங்கப்பட்டது. அது டத்தோ பட்டத்தைக் கொண்டது.

“அவர்மீது ஊழல், நம்பிககை மோசடி, பணமுறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதனால் அவருடைய S.P.M.S. , D.P.M.S. விருதுகள் இரத்துச் செய்யப்படுகின்றன.

“நீதிமன்ற வழக்குகள் முடிந்ததும் சுல்தான் நிலைமையை மறுபரிசீலனை செய்வார்”, என முகம்மட் அமின் கூறினார்.

ரோஸ்மாமீதும் சில வழக்குகள் உள்ளதால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பட்டங்களும் இரத்துச் செய்யப்படுகின்றன. வழக்கு முடிந்ததும் சுல்தான் அதையும் பரிசீலனை செய்வார்.

கடந்த அக்டோபர் மாதம் நெகிரி செம்பிலான் அரண்மனையும் நஜிப்- ரோஸ்மா தம்பதிகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பட்டங்களை இரத்துச் செய்தது.

இந்தப் பட்டங்கள் பறிக்கப்பட்டாலும் அவர்களிடம் மற்ற மாநிலங்கள் கொடுத்த பட்டங்கள் நிறையவே இருக்கின்றன.