சுற்றுவளைத்த இலங்கை அமைச்சர்கள்; திணறும் ரிஷாட்!

இலங்கையில் கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட கொடூர தற்கொலை தாக்குதலையடுத்து முஸ்லிம் அமைச்சர்கள் சிலரின் மீது பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சந்தேகிக்கும் அமைச்சர்களின் அலுவலகங்கள் வீடுகள் என்பன முப்படையினரின் தீவிர தேடுதலுக்குட்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கடந்த வாரம் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் மன்னாரில் இருக்கும் வீடும் சோதனையிடப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவர கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு உதவியதாக 11 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதற்கான பேச்சுக்கள் நடந்து முடிந்திருப்பதாகவும் எதிர்க்கட்சி பேச்சாளர் ஒருவர் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் இந்த யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற பேச்சு நடத்தப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தன் மீதான குற்றச்சட்டுகள் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு அமைச்சர் றிசாட் பதியுதீன் நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றும் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி இலங்கை அரசியலில் ஏற்பட்ட 52 நாள் பிரளயத்தின் போது, தனது உதவியை நாடியவர்களுக்கு, அப்போது தான் ஒத்துழைக்கவில்லை என்பதால் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இப்போது தன்மீது இவ்வாறான பழியை அவர்கள் சுமத்துவதாக அமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு மற்றும் ஈஸ்டர் தினத்தில் நடந்த கொடூர தொடர் தற்கொலைத் தாக்குதல்களை எந்தவொரு முஸ்லிமும் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்லாமும் அதற்கு அங்கீகாரம் வழங்கவும் இல்லை. அதற்கு எடுத்துக்காட்டாகவே தற்கொலை குண்டுதாரிகளின் சடலங்களைக் கூட நாங்கள் பொறுப்பேற்கவில்லை, முஸ்லிம் பிரதேசங்களில் அவற்றினை அடக்கம் செய்வதற்கு அங்கீகாரம் வழங்கவுமில்லை” என தெரிவித்திருந்தார்.

-athirvu.in

TAGS: