தாகத்தில் தமிழகம்.. ஊற்று நீரை நம்பி வாழும் மக்கள்.. ஒரு குடம் நிரம்ப 4 மணி நேரம் காத்திருப்பு

மதுரை: தமிழகத்தில் பல்வேறு பகுதியில் தண்ணீரில்லாததால் ஊற்று நீரை நம்பி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதலே வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டன.

இந்த நிலையில் தற்போது கோடை வெயில் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் உருவான ஃபனி புயலால் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினை தீரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது ஒடிஸாவுக்கு சென்றுவிட்டது.

தண்ணீர் பஞ்சம்

இந்த புயல் டைவர்ட் ஆனதால் தமிழகத்தில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் கொஞ்சம் நஞ்சம் இருந்த தண்ணீரும் இல்லாமல் நீர் நிலைகள் வறண்டு விட்டன. இதனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

வேலைக்கு செல்லாத நிலை

கிராமப்புறங்களில் கூலி தொழில் செய்யும் பெண்கள் இந்த தண்ணீர் பிரச்சினையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் சேர்ந்து உழைத்தால்தான் பிழைப்பு நடத்த முடியும் என்ற இந்த காலத்தில் தண்ணீரை சேகரிக்க வேலைக்கு செல்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் வாடுதல்

எனினும் தண்ணீர் கிடைத்தபாடில்லை. இந்த நிலையில் மதுரை மாவட்டம் அருவிமலை பகுதியில் கொட்டாம்பட்டி ஊராட்சியில் 400 அடி ஆழத்தில் 600 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. ஆனால் நிலத்தடி நீர் 700 அடி ஆழத்தில் சென்றுவிட்டதால் நீரின்றி மக்கள் வாடி வருகின்றனர்.

தண்ணீர் இல்லை

கொட்டாம்பட்டி ஊராட்சியில் 18 கிராமங்கள் தண்ணீரின்றி அவதியில் உள்ளனர். ஒரு கிராமத்தில் 2000 குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்பங்கள் அனைவரும் கண்மாய்களில் உள்ள ஊற்று நீரை நம்பியே உள்ளனர். அது போல் புதுக்கோட்டை வேள்வரை கிராமத்தில் தண்ணீர் இல்லை.

வேதனை

இதனால் பெண்கள் ஆற்று மணலில் பள்ளம் தோண்டி ஊற்று வெட்டி அதிலிருந்து சிறிய கொப்பரைகள் மூலம் தண்ணீரை சிறுக சிறுக சேகரித்து வருகின்றனர். இதனால் ஒரு குடம் நிரம்ப 4 மணிநேரம் எடுப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

குடிநீர் திட்டம்

7ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் உள்ள நீர் உப்பு நீராக மாறிவிட்டது. இதனால் தோல் நோய்கள் வருவதாகவும் அதில் குளிப்பதால் அரிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே தண்ணீர் பஞ்சத்தை போக்க கூட்டுக் குடிநீர் திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: