சவுதியில் பெட்ரோல் குழாய்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் ஹவுத்தி போராளிகள் தாக்குதல்!

சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான பெட்ரோல் குழாய்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் ஹவுத்தி போராளிகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் வினியோகம் சீர்குலைந்தது.

சவுதி அரேபியாவின் பகை நாடான ஈரான் ஏமன் நாட்டில் உள்ள ஹவுத்தி போராளிகளை வெளிப்படையாக ஆதரித்து வருகிறது. இந்த போராளிகள் ஏமன் நாட்டின் எல்லை வழியாக சவுதி அரேபியாவின் மீது அடிக்கடி அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பெட்ரோலிய வளத்தை மட்டுமே நம்பியிருக்கும் சவுதி அரேபியா அரசு நாடு முழுவதும் பல பெட்ரோலிய கிணறுகளை அமைத்து உற்பத்தி மற்றும் வினியோகத்தில் ஈடுபட்டுள்ளது.

நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள தலைநகர் ரியாத் நகரில் இருந்து மேற்கில் உள்ள யான்பு நகருக்கு குழாய்கள் மூலமாக பெட்ரோலிய கச்சா எண்ணெய் அனுப்ப சுமார் 1200 கிலோமீட்டர் நீளமுள்ள பைப்லைன் வழித்தடம் உருவாக்கப்பட்டு, பெட்ரோல் வினியோகத்தை அரசு செய்து வருகிறது. இந்த குழாய்களில் கச்சா எண்ணெய் வேகமாக பாய்ந்து செல்வதற்காக வழியில் சில இடங்களில் பம்பிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரியாத் நகரின் அருகே உள்ள அஃபிஃப் மற்றும் டவாட்மி பம்பிங் ஸ்டேஷன்கள் வழியாக செல்லும் பைப்லைன் குழாய்களின் மீது இன்று அதிகாலை ஹவுத்தி போராளிகள் ஆளில்லா விமானம் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால், குழாய்களின் பெரும்பகுதி சேதம் அடைந்ததால் சில மணி நேரத்துக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தடைபட்டது.

-athirvu.in