1எம்டிபி கடனில் ஒரு பகுதியை செலுத்த மலேசிய நம்பிக்கை நிதி பயன்படுத்தப்படும்

1எம்டிபி கடனில் ஒரு பகுதியை செலுத்த மலேசிய நம்பிக்கை நிதியத்தில் திரட்டப்பட்ட நிதியத்தை முழுமையாக அரசாங்கம் பயன்படுத்தவிருக்கிறது என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரியப்படுத்தினார்.

மலேசிய நம்பிக்கை நிதிய (வுயடிரபெ ர்யசயியn ஆயடயலளயை) சேகரிப்பு மூடப்பட்ட போது அதன் மூலம் 203 மில்லியன் திறட்டப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் 14 வது பொதுத் தேர்தல் மூலம் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மே 30, 2018 பக்காத்தான் ஹரப்பான் அரசு இந்நிதியத்தை தொடங்கியது.

கடந்த பாரிசான் ஆட்சியின் போது ஏற்பட்ட கடன் சுமையை குறைக்கும் பொருட்டு பொதுமக்களிடமிருந்து இந்த நிதி திறட்டப்பட்டது.
ஜனவரி 14 வரை இந்நிதியத்தின் கடைசி இருப்பு தொகை RM202,716,775.10 என நிதியமைச்சி பிப்ரவரி 7-ஆம் அன்று அறிவித்தது. மேலும் இத்தொகைக்கான நிலையான வைப்புத்தொகை வட்டியான RM575,342.31யையும் சேர்த்து 203 மில்லியன் ஆனது.

மலேசிய நம்பிக்கை நிதி மூலம் திரட்டப்பட்ட தொகை 1எம்டிபி-யின் மொத்த கடன் RM51 பில்லியனை கட்டி முடிக்க முடியாவிட்டாலும், அரசாங்கம் நன்கொடையளித்த மக்களுக்கு பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டது.

“நாட்டின் கடனைத் தீர்ப்பதற்கு மலேசியர்களின் விசுவாசம் மற்றும் தேசபக்தி ஆகியவற்றின் அடையாளமாக மலேசிய நம்பிக்கை நிதி அமைந்துள்ளது” என்று லிம் குவான் எங் கூறினார்.