ஜிஇ14-இல் பக்கத்தான் ஹரப்பானுக்கு எதிராகப் பேசிய யாபிம் டிஜி தற்காலிக பணிநீக்கம்

இஸ்லாமிய பொருளாதார மேம்பாட்டு அற வாரியம்(யாபிம்) அதன் தலைமை இயக்குனர்(டிஜி) அபிபுல்லா சம்சுடினை இடைக்காலத்துக்குப் பணிநீக்கம் செய்துள்ளது.

யாபிம் தலைவர் முகம்மட் டாவுட் பக்கார், இன்று ஓர் அறிக்கையில் கடந்த பொதுத் தேர்தலின்போது அப்போதைய எதிர்க்கட்சியான பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களிக்கக் கூடாது என்று அபிபுல்லா காணொளி ஒன்றில் யாபிம் பணியாளர்களை மிரட்டியதாகக் கூறப்படுவது குறித்து யாபிம் ஒரு விசாரணைக் குழு அமைத்திருப்பதாகக் கூறினார்.

“விசாரணைக் குழு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட அவரை விசாரணைக்கு அழைக்கும்”, என்று முகம்மட் டாவுட் கூறினார்.

அபிபுல்லா தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளபோது இயக்குனர் பரிஹா ஹசான் இடைக்காலத் தலைமை இயக்குனராக நியமிக்கப்படுவார்.

அக்காணொளியில் அபிபுல்லா அவரின் பணியாளர்களின் வாக்குகளை ஒவ்வொன்றாக சோதனை செய்யப்போவதாகக் கூறினாராம்.

காணொளியில் காணப்படும் நபர், “உங்களில் சிலர் பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களிக்க விரும்புவீர்கள்”, என்று கூறுகிறார்.

“அது இரகசிமானதுதான். ஆனால், நான் ஒவ்வொன்றையும் சோதனை செய்வேன். தேர்தல் ஆணையம் சென்று ஒவ்வொருவரும் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று பார்ப்பேன். பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களித்திருந்தால் யாப்பிமில் வேலை செய்யும் தகுதி உங்களுக்கு இல்லை. போய் டிஏபி-இடம் வேலை கேளுங்கள்”, என்று நீலநிற பத்தேக் சட்டை அணிந்த அந்த மனிதர் கூறினார்.