தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு – என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கின!

தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவளித்த வழக்கில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவளித்தனர் என கூறி 8 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் மீது, தங்களது தீவிரவாத குழுவுக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்ய திட்டமிட்டது, ஆயுத போராட்டம் நடத்துவதற்கு தேவையான நிதியை உயர்த்துவது, சிறையில் உள்ள தீவிரவாதிகளை தப்பிக்க செய்து, அவர்களை நாட்டிற்கு எதிராக செயல்பட செய்வது ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த ஜனவரி 8-ந்தேதி வழக்கு பதிவானது.

இதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் தமிழகத்தின் ராமநாதபுரம், சேலம் மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளில், 10 பேரின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், 3 லேப்டாப்புகள், 3 ஹார்டு டிஸ்குகள், 16 மொபைல்போன்கள், 8 சிம்கார்டுகள், 2 பென் டிரைவ்கள், 5 மெமரி கார்டுகள் மற்றும் கார்டு ரீடர் ஒன்று உள்ளிட்ட டிஜிட்டல் பொருட்களும் இதுதவிர 2 கத்திகளும் கைப்பற்றப்பட்டன.

சட்டவிரோத ஆவணங்களும் அதிக அளவில் கைப்பற்றப்பட்டு உள்ளன. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

-athirvu.in

TAGS: