கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரு போலீஸ் அதிகாரிகளும் ஐந்து போலீஸ்காரர்களும் கைது

ஒரு வர்த்தகரிடம் கொள்ளையிடப்பட்ட சம்பவம்மீதான விசாரணைக்கு உதவியாக இரு போலீஸ் அதிகாரிகளும் ஐந்து சாதாரண போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டனர்.

இரு போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் மூவாரில் உள்ள அரச மலேசிய தொழில்நுட்பக் கல்லூரி இன்ஸ்பெக்டர், மற்றவர் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் என கோலாலும்பூர் போலீஸ் தலைவர் மஸ்லான் லாசிம் கூறினார்.

ஐந்து போலீஸ்காரர்களில் ஒருவர் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தையும் மூவர் சீ பார்க் போலீஸ் நிலையத்தையும் மற்றொருவர் ஜாலான் பண்டார் போக்குவரத்து போலீஸ் நிலையத்தையும் சேர்ந்தவர்கள்.

வர்த்தகர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை செய்த புகாரின் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக மஸ்லான் விளக்கினார்.

ஐவரும் தங்களை புக்கிட் அமான் வணிகக் குற்றவியல் புலன் விசாரணைத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று கூறி வர்த்தகரிடம் அறிமுகம் செய்து கொண்டார்களாம்.

புகார்தாரர் கோலாலும்பூர், ஜாலான் சீலாங்கில் வர்த்தக லைசென்ஸ் இல்லாமலேயே நாணய மாற்று வியாபாரம் செய்து வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குற்றஞ்சாட்டி வர்த்தகரையும் அவரின் ஊழியர்கள் நால்வரையும் கைது செய்து அவரது கைபேசியையும் இரும்புப் பெட்டியில் இருந்த ரிம4,000- த்தையும் பறிமுதல் செய்தனர்.

வர்த்தகரிடம் ரிம200,000 கொடுத்தால் விடுவிப்பதாகவும் பேரம் பேசியுள்ளனர். பயந்துபோன வர்த்தகர் அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்திருக்கிறார் என மஸ்லான் விவரித்தார்.

இவ்விவகாரத்தைக் கடுமையாகக் கருதுவதாக அவர் கூறினர். குற்றச்செயலில் ஈடுபடுபடுவர் போலீஸ் அதிகாரியோ சாதாரண பொதுமக்களோ யாரும் தப்பிக்க முடியாது என்றாரவர்.

“குற்றச் செயலுக்கு ஏற்ப தண்டனை பெறுவார்கள்”, என்றவர் சொன்னார்.

-பெர்னாமா