உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் மலாக்கா அலோர் காசா வட்டாரத்தில் தமிழர் தேசியப் பட்டறை

கடந்த மே 19, ஞாயிறுக்கிழமை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் மலாக்கா அலோர் காசா வட்டார பொறுப்பாளர்களான திரு. கணேசன், திரு. சிவகுமார் மற்றும் திரு. அப்பு தலைமையில் தமிழர் தேசியப் பட்டறை (11) மிகச் சிறப்பாக  நடைபெற்றது.  காலை 9 முதல் மாலை 5 வரை இலவசமாக நடத்தப்பட்ட இப்பட்டறையை பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல் இயக்கத்தை சார்ந்த தமிழ் ஆய்வாளர்களும் தமிழிய சிந்தனையாளர்களுமான திரு முருகையன் திரு தமிழ்ச்செல்வம் மற்றும் திரு பாலமுரளி ஆகியோர்கள் மிக நேர்த்தியாக வழி நடத்தினார்கள். 

மலேசிய தமிழர்கள் தமிழர் தேசிய சிந்தனையை உணர்ந்து, அதன் வழிதட பாதையில் பயணித்து தமிழர் இனத்தின் முழு விடுதலையை  இலக்காக கொள்ளவே இந்த தமிழர் தேசிய உச்செய்திகளை 6 கூறுகளாக பிரித்து, வகுத்து, கட்டமைத்து எளிய முறையில் அனைவருக்கும் புரியும் வகையில் தக்க தரவுகளுடன் ஒளிப்படமாகவும் காணொளிகளாகவும் படைத்தனர்.  “தமிழர் தேசம், தமிழ், தமிழினம், தமிழர் பண்பாடு, தமிழர் சமயம், தமிழர் பெருநாட்கள்”  போன்ற முதன்மை அடிப்படை கூறுகளிலிருந்து எண்ணிலடங்காத தமிழர்களின் நுட்பமான  மீட்சி வீழ்ச்சி செய்திகளை வரையறைக்கப்பட்டு படைக்கப் பட்டது. 

கலந்து கொண்ட 35-கும் மேற்பட்ட வட்டார தமிழர்கள் தமது வரலாற்றில் மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட பல செய்தி தெளிவுகள் அறிந்ததுடன், பட்டறை முடிவில் வழங்கப்பட்ட  சான்றிதழையும் பெற்று கொண்டனர். 

மேலும் தமது வாழ்வியலில் வரும் திருமணம் முதல் பெயர் சூட்டுதல், புதுமனை, பூப்பெய்தல், என இறப்பு வரை அனைத்து காரியங்களையும் தமிழர் முறைப்படி செய்யும் விபரங்களையும் அறிந்துக் கொண்டனர்.  தொடர்ந்து வளரும் இளைய தமிழர் தலைமுறையினருக்கு தமது இனம், மொழி, சமயம், பண்பாடு, மரபு, தொன்மை, வரலாறு, வாழ்வியல், கல்வி, அறிவியல், உரிமை, உடமை போன்ற அடித்தள மீட்சி சிந்தனையை உருவாக்க, இதுபோன்ற தமிழர் தேசிய  பட்டறைகளை நாடு முழுவதும் முன்னெடுத்து வருவதாக இப்பட்டறையின் ஏற்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளரும் உலகத்தமிழர் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் செயல் பிரிவு பொறுப்பாளருமான  திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

தங்களது வட்டாரங்களில் தமிழர் தேசியப் பட்டறை நடத்த விரும்புவோர் தொடர்புக்கு : 0143099379