சிங்கப்பூரில் கருணை மனு தாக்கல் செய்யும் பன்னீர்செல்வத்துக்கு அரசாங்க சட்ட உதவி

மலேசியரான பன்னீர்செல்வம் பரந்தாமன்,32, சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு எதிராக அதிபருக்குக் கருணை மனு தாக்கல் செய்வதற்கு அரசாங்கம் சிறந்த சட்ட உதவிகளைச் செய்யும் என வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா கூறினார்.

“தூதரகம் உதவி வழங்கி வருகிறது. நாங்கள் தேவையான உதவிகளை வழங்குவோம். ஆனால், அவரின் குடும்பம்தான் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்”, என்றார்.

அதிபருக்குச் சமர்ப்பிக்கப்பட்ட கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முறையிட பன்னீர்செல்வதுக்கு அவகாசம் வழங்குவதற்காக அவரது தண்டனையை நிறுத்திவைக்க சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம்
வியாழக்கிழமை ஒப்புக்கொண்டது.

பன்னீர்செல்வம் 2014-இல் ஊட்லண்ட்ஸ் சுங்கச் சோதனைச் சாவடியில் 51.84 டயாமோர்பின் கடத்தியதற்காக பிடிபட்டார். அவருக்கு சிங்கை உயர் நீதிமன்றம் 2017, ஜூன் 27-இல் மரண தண்டனை விதித்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட அவர், அதிபரிடம் கருணை மனு தாக்கல் செய்தார். அது நிராகரிக்கப்பட்டது.

கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார்.

அந்த மேல்முறையீட்டை தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனனும், முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஜூடித் பிரகாஷ், ஸ்டீபன் சோங் ஆகியோரும் விசாரித்தனர்.

சுந்தரேஷ் மேனன், தம் தீர்ப்பில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக முறையீடு செய்யும் பன்னீர்செல்வம் “தேவையான சட்ட ஆலோசனைகள் பெற போதுமான அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்” என்றார்.