மந்திரி புசார் பதவியிலிருந்து விலகியது நான் செய்த சிறந்த முடிவு- ஒஸ்மான்

11 மாதங்கள் மந்திரி புசார் பதவியிலிருந்து விட்டு அதிலிருந்து விலகியதே தான் செய்த சிறந்த முடிவு என்கிறார் கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒஸ்மான் சபியான்.

பெர்னாமாவுக்கு அளித்த நேர்காணலில் அவ்வாறு கூறிய ஒஸ்மான் பதவி துறந்ததற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.

“(பணிவிலகல்)……அதுதான் நான் செய்த சிறந்த முடிவு.

“இல்லையேல் என் பெயரும் ஜோகூர் அரசியல் சூழலும் கெட்டு போயிருக்கும்”, என்றாவர்.

தம் அரசியல் வாழ்க்கையை விவரித்த ஒஸ்மான், மந்திரி புசார் ஆவது பற்றி நினைத்துக்கூட பார்த்ததில்லை, ஏனென்றால், பிஎன் அதன் வலுவான கோட்டையான ஜோகூரில் ஆட்சி இழக்கும் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று என்றார்.

“மூன்று முறை அம்னோ சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். அப்போதெல்லாம் மந்திரி புசாராவது பற்றி நான் நினைத்ததே இல்லை.

“அவ்வளவு ஏன், நான் ஆட்சிமன்றத்தில்கூட இருந்ததில்லை”, என்றவர் சொன்னார்.

பின்னர் பெர்சத்துவில் சேர்ந்து கட்சி உறுப்பினர்களை ஒன்றுதிரட்டி அவர்களைப் பொதுத் தேர்தலுக்குத் தயார்படுத்துவதில் கவனம் செலுத்தியதாகக் கூறினார்.

“ஒரு புதிய கூட்டணி, பணபலம் இல்லாத நிலையில் அம்னோவையும் பிஎன்னையும் எதிர்த்து வெற்றி பெற்றது சாதாரண விசயமல்ல”, என்றார்.

பக்கத்தான் ஹரப்பான் தேர்தலில் வெற்றி பெற்றதும் ஒஸ்மான் ஜோகூர் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்தபோது அனுபவமில்லாத ஆட்சிமன்ற உறுப்பினர்களை வழிநடத்துவது பெரும் சவாலாக இருந்ததாம்.

“அவர்களுக்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் என்பது ஒரு புதிய அனுபவம். அதற்கேற்ப அவர்களின் சிந்தனைப் போக்கை மாற்றுவது பெரும் சவாலாக இருந்தது”, என்றார்.

ஆனால், ஒஸ்மான் 11 மாதங்கள்தான் மந்திரி புசாராக இருந்தார். ஏப்ரல் 14-இல் அவருடைய இடத்தில் புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஸருடின் ஜோகூரின் 17வது மந்திரி புசாராக நியமிக்கப்பட்டார்.